இலங்கை
அமெரிக்காவுடனான புதிய ஒப்பந்தங்கள் விரைவில் கைச்சாத்தாகும் ; அனில் ஜயந்த
அமெரிக்காவுடனான புதிய ஒப்பந்தங்கள் விரைவில் கைச்சாத்தாகும் ; அனில் ஜயந்த
விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ், நான்காவது கட்ட மதிப்பாய்வு தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்பாட்டை இந்த வாரத்திற்குள் எட்ட முடியும் என அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்காவில் உள்ள இலங்கை பிரதிநிதிகள் குழு, சர்வதேச நாணய நிதியத்தின் குழுவுடன் ஆரம்பநிலை பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதுடன், அவை வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் நிர்ணயித்த இலக்குகளை அடைவதற்கான திட்டத்தை இலங்கை முன்னெடுத்து வருகிறது.
அதற்கிணங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அதேநேரம் அண்மையில் அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட பரஸ்பர தீர்வை வரி பற்றி அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் அலுவலகத்துடன் கலந்துரையாடப்பட்டது.
அந்த சந்திப்புகள் வெற்றிகரமாக அமைந்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அமெரிக்க வரிகள் தொடர்பான விரைவான நடவடிக்கைகள், இராஜதந்திர அணுகுமுறை மற்றும் நேர்மையான தலையீடுகளுக்காக இலங்கையை அமெரிக்க அதிகாரிகள் பாராட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் “வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பாக அமெரிக்காவுடன் எட்டக்கூடிய புதிய ஒப்பந்தங்களை” விரைவில் வெளிப்படுத்த உள்ளதாகவும் தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.