நக்கீரன் செய்திப்பிரிவு
Photographer
Published on 24/04/2025 | Edited on 24/04/2025
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் உலக நாடுகள் மத்தியிலும் அதிர் வலையை ஏற்படுத்தியது. இதனால் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை உருவாகியுள்ளது. இரண்டு நாடுகளும் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகின்றனர்.
இந்த சூழலில் பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கான், இந்தியில் நடித்த ‘அபிர் குலால்’ படம் எதிர்ப்பு குரல்களை சம்பாதித்து வருகிறது. இப்படம் இந்தியாவில் மே 9ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் ஹேஷ் டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டது. இதைத் தவிர்த்து மேற்கத்திய இந்திய சினிமா ஊழியர்களின் கூட்டமைப்பு இந்தப் படத்தை வெளியிடத் தடை செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியது. மேலும் பாகிஸ்தான் கலைஞர்கள் இந்திய சினிமாவில் பங்கேற்கக்கூடாது என வலியுறுத்தியது. ஏற்கனவே 2019ஆம் ஆண்டு இக்கூட்டமைப்பு உரி தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் திரைக் கலைஞர்கள் அங்கம் வகிக்கும் இந்திய படங்கள் மற்றும் மற்ற மொழி படங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என அறிவித்தது. அதையே இப்போது மீண்டும் வலியுறுத்துவதாக தற்போது தெரிவித்துள்ளது. தொடர்ந்து பட வெளியீட்டிற்கு எதிர்ப்பு குரல் அதிகரித்து வருவதால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக ஃபவாத் கான் நடித்த ‘தி லெஜண்ட் ஆஃப் மௌலா ஜாட்’ என்ற பஞ்சாபி மொழி படம் இந்தியாவில் வெளியாகவிருந்து பின்பு வலது சாரி அமைப்பின் எதிர்ப்பால் வெளியாகாமல் போனது. அந்த வகையில் இந்தப் படமும் அமைந்து விடுமா என்ற அச்சம் ஃபவாத் கான் மத்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் படக்குழு படத்தை தள்ளி வைக்க பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுவருவதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே ஃபவாத் கான் பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்வதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவர் மட்டும் அல்லாது ‘அபிர் குலால்’ படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை வாணி கபூரும் தனது வருத்தத்தை சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இப்படம் ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. இப்படத்தை வெளியிடத் தடை விதி்க்க இந்திய தகவல் ஒளிபரப்புத்துறை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சிக்கல் தொடர்பாக விரிவான மற்றும் தெளிவான அறிவிப்பு அரசு தரப்பிலோ அல்லது படக்குழு தரப்பிலோ விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.