இந்தியா
‘100 சதவீதம் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் ஊக்கத்தொகை’: புதுச்சேரி சபாநாயகர் அறிவிப்பு
‘100 சதவீதம் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் ஊக்கத்தொகை’: புதுச்சேரி சபாநாயகர் அறிவிப்பு
புதுச்சேரி, மணவெளி சட்டமன்றத் தொகுதி நோணாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சபாநாயகருமான செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். அப்போது, “இந்த தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அனைத்து அரசு பள்ளியின் தரத்தையும் உயர்த்தும் விதமாக செயலாற்றி வருகிறேன்.சிறந்த ஆசிரியர்களை பெற்றுள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டின் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மணவெளி சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் பெறும் அரசு பள்ளியின் மாணவர்கள் அனைவருக்கும் ரூ. 10 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இதனை என்னுடைய நிதியில் இருந்து வழங்குவேன்.மாணவர்கள் அனைவரும் கல்வியுடன் சேர்த்து ஒழுக்கத்தை பின்பற்றி முன்னேற வேண்டும். புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கிறோம்” எனக் கூறினார்.இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் விரிவுரையாளர் முனைவர் வே. பூங்குழலி வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.