இலங்கை
இணையக் குற்ற விசாரணைப் பிரிவு யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்
இணையக் குற்ற விசாரணைப் பிரிவு யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்
வடக்கில் இடம்பெறும் அனைத்து இணையக் குற்றங்கள் தொடர்பிலும் விரிவாக விசாரிக்கப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இணையக் குற்றப் பிரிவு நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
வடக்கில் அண்மைக்காலமாக இணையக் குற்றங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. எனவே, இந்தக் குற்றங்களை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான அவதூறுகள், பாலியல் கருத்துக்கள், இணைய மோசடிகள், ஆபாசப் பரிமாற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களுக்கு எதிரான நீதிக்காக இவ்வளவு காலமும் கொழும்புக்குச் செல்ல வேண்டிய நிலையே இருந்தது. இதனால், காலதாமதங்கள் ஏற்பட்டதுடன், பெரும் அலைச்சலையும் பொதுமக்கள் சந்திக்க வேண்டியிருந்தது.
இவ்வாறான விடயங்களைக் கருத்திற்கொண்டே, தற்போது வடக்கில் இணையக் குற்றப் பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கிலுள்ளவர்கள் இனிவரும் காலத்தில் மிக இலகுவாக இணையக் குற்றங்களுக்கு எதிராக நீதியைப் பெறமுடியும்.
அத்துடன், இதுவரை வடக்கில் இருந்து பதிவாகி காத்திருப்புப் பட்டியலில் உள்ள இணையக் குற்றம் தொடர்பான விசாரணைகள் விரைந்து விசாரிக்கப்படும் – என்றார்.