இலங்கை
லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகின்றார் ரணில்
லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகின்றார் ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 28ஆம் திகதி இலஞ்ச, ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். ரணிலின் சட்டத்தரணியால், இந்த விடயம் விசாரணை ஆணைக்குழுவுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
சாமர சம்பத் தஸாநாயக்க ஊவா மாகாண முதல்வராக பதவி வகித்தபோது, இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதிமோசடி தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது. இதற்காக, சாமர சம்பத் தஸாநாயக்க கைதும் செய்யப்பட்டார்.
இந்தநிலையில், ரணில் விக்ரமசிங்க கடந்த 10ஆம் திகதி சாமர சம்பத் தசநாயக்கவின் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவதற்காக ஏப்ரல் 17ஆம் திகதி தமது ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு ரணிலுக்கு அழைப்பாணை அனுப்பியிருந்தது.
எனினும், புத்தாண்டு காரணமாக ஏப்ரல் 17ஆம் திகதி தம்மால் முன்னிலையாக முடியாது எனவும், பிறிதொரு திகதி வழங்கமாறும் தமது சட்டத்தரணி ஊடாக ரணில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து, எதிர்வரும் 25ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.
எனினும், தனது சட்டத்தரணி வெளிநாடு சென்றுள்ளதால் அவர் நாடு திரும்பிய பின்னர் முன்னிலையாகுவேன் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்தே, எதிர்வரும் 28ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் விசாரணைக்காக ரணில் முன்னிலையாகுவார் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.