இலங்கை
உயர்தர பரீட்சையில் மாணவர்களை விட மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு அதிகமாக தெரிவு!
உயர்தர பரீட்சையில் மாணவர்களை விட மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு அதிகமாக தெரிவு!
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியான நிலையில் ஆண் பரீட்சார்த்திகளை விட பெண் பரீட்சார்த்திகள் அதிக சதவீதத்தினர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
பரீட்சை எழுதிய அனைத்து பரீட்சார்த்திகளிலும் 64.73% பேர் பல்கலைக்கழக அனுமதிக்கான தகுதிகளைப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பெண் பரீட்சார்த்திகளில், 71.93% பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர், அதே நேரத்தில் ஆண் பரீட்சார்த்திகளில் 60.24% பேர் பல்கலைக்கழகத் தகுதியைப் பெற்றுள்ளனர்.
29,244 பரீட்சார்த்திகள் உயர்தர பரீட்சைகளின் மூன்று பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளதாக அவர் கூறினார்.
அத்துடன் மூன்று பாடங்களிலும் தோல்வியடைந்த மாணவர்களின் சதவீதத்திலும் இதேபோன்ற நிலை காணப்படுவதாகவும், ஆண் பரீட்சார்த்திகளில் 13.87% பேரும், பெண் பரீட்சார்த்திகளில் 8.6% பேரும் மூன்று பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் மேலும் எடுத்துரைத்தார்.
இந்த ஆண்டு தேர்வுகளுக்குத் தோற்றிய 456 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை இடைநிறுத்தவும் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை ரக்வனா தேமுவாவட மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த கவிந்தி கீதாஞ்சலி, உடல் ஊனத்துடன் வாழ்ந்து கொண்டே உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, கலைப் பிரிவில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.