இலங்கை
பட்டலந்த அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிப்பு
பட்டலந்த அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிப்பு
பட்டலந்த வதைமுகாம் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அறிவுறுத்தலுக்கமையவே, ஜனாதிபதி அலுவலகத்தால் இதற்குரிய நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி நிலவிய 1988ஆம் ஆண்டு தொடக்கம் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில், பியகம – பட்டலந்த வீடமைப்புத் திட்டத்தில் உள்ள வீடுகளுக்குள் சட்டவிரோதமான முறையில் இளைஞர்கள் தடுத்துவைத்து சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டதுடன், பலர் காணாமலாக்கப்பட்டனர்.
இதுதொடர்பில் விசாரணை நடத்தி பொறுப்புக்கூற வேண்டியவர்களை அடையாளம் காண்பதற்காக 1995ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்காவால், ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டது.
1998ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் திகதி மேற்படி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை சந்திரிக்காவிடம் கையளிக்கப்பட்டது. அதன்பின்னர் இது விடயத்தில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. பரிந்துரைகளும் அமுலாக்கப்படவில்லை.
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் பட்டலந்த விவகாரம் மீண்டும் பேசுபொருளானது. இதைத் தொடர்ந்து, பட்டலந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அது தொடர்பில் ஒரு நாள் விவாதம் நடத்தப்பட்டு, மேலதிக நடவடிக்கைக்காக அந்த அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.