இலங்கை

கொத்மலை பஸ் விபத்து ; ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்த விடயம்

Published

on

கொத்மலை பஸ் விபத்து ; ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்த விடயம்

இறம்பொடை – கெரண்டி எல்ல பகுதியில் 22 பேருக்கு மரணத்தை ஏற்படுத்திய விபத்துடன் தொடர்புடைய பேருந்தில் நடத்தப்பட்ட ஆரம்ப பரிசோதனையில் பேருந்தில் இயந்திரக் குறைபாடுகள் எதுவும் இல்லை என, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் நுவரெலியா மாவட்ட பிரதான மோட்டார் வாகன பரிசோதகர் ஜாலிய பண்டார தெரிவித்துள்ளார்.

அத்துடன், விபத்து நடந்த இடத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

Advertisement

அதனூடாக, சாரதி பேருந்தை ஆபத்தான முறையில் ஓட்டிச் சென்றதாக எந்த அறிகுறிகளும் அவதானிக்கப்படவில்லை என, நுவரெலியா மாவட்ட பிரதான மோட்டார் வாகன பரிசோதகர் ஜாலிய பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் சிரேஷ்ட மோட்டார் வாகன பரிசோதகர்களைக் கொண்ட குழு, விரிவான அறிக்கைகளைத் தயாரித்து மோட்டார் வாகன ஆணையாளர் நாயகம் மூலம் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரிடம் சமர்ப்பிக்கும் என, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை நேற்று பிற்பகல் முதல் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement

அந்தவகையில் இன்று காலை பல உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இறந்தவர்களில் அடையாளம் காணப்படாத ஒருவரின் உடலும் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் 17 முதல் 79 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், அவர்கள் கொஸ்லந்த, திஸ்ஸமஹாராம, பேராதெனிய, மொனராகலை, லுனுகம்வெஹெர, பன்னில மற்றும் குருநாகல் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

Advertisement

அத்துடன், எதிலிவெவ , பண்டாரவளை, அம்பகஸ்தோவ, கந்தளாய், சிலாபம், பொல்பித்திகம மற்றும் மதவாச்சி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, காயமடைந்த 43 பேர் இன்னும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version