இலங்கை
உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் பங்கேற்கும் யாழ் சிறுமி; தந்தை முன் வைத்த கோரிக்கை
உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் பங்கேற்கும் யாழ் சிறுமி; தந்தை முன் வைத்த கோரிக்கை
2025இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ண சதுரங்க போட்டியில், யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியை சேர்ந்த கஜிசனா- தர்சன் என்ற சிறுமி தெரிவாகியுள்ளார்.
இது குறித்து அவரது தந்தை இன்றையதினம் ஊடக சந்திப்பு ஒன்றினை நடாத்தினார். இதன்போது அவர் தெரிவிக்கையில்,
எனது மகள் 2025இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் எட்டு வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் போட்டியிடுவதற்கு தெரிவாகியுள்ளார்.
எட்டு வயதிலேயே எனது மகளுக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.
அதுமட்டுமல்ல, எனது மகள் இந்த ஆண்டு 5 சர்வதேச போட்டிகளில் விளையாடவுள்ளார்.
கடந்த மாதம் அல்பேனியாவில் நடைபெற்ற மேற்கு ஆசிய இளையோர்களுக்கான போட்டி நடைபெற்றது.
அந்த போட்டியில் பங்குபற்றுவதற்கு நிதி அனுசரணையாளர்கள் கிடைக்காததால் அதில் பங்குபற்ற முடியவில்லை.
இவர் கடந்த வருடம் தேசிய ரீதியாக நடைபெற்ற சதுரங்க போட்டியில் முதலிடத்தை பெற்று, இலங்கையின் 8 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் உத்தியோகபூர்வ வீரராக தெரிவு செய்யப்பட்டு தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய பாடசாலைகள் இறுதிப் போட்டியில் கலந்துகொண்டு இரண்டு சர்வதேச வெண்கலப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.
கடந்த டிசம்பர் மாதம் உலகளவிலான ரப்பிட் செஸ் தரப்படுத்தலில் இரண்டாவது இடத்தில் காணப்பட்டார்.
எனவே இவர் தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் எமது நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுவதற்கு நிதி வசதி தேவையாகவுள்ளது.
மேலும் நிதி அனுசரணையாளர்கள் ஆதரவு வழங்கும் பட்சத்தில் எமது பிள்ளை மேலும் பல போட்டிகளில் பங்குபற்றி எமது மண்ணுக்கு பெருமை சேர்க்க வழிவகுக்கும் என்றும் சிறுமியின் தந்தை கோரிக்கை முன்வைத்தார்.