நக்கீரன் செய்திப்பிரிவு
Photographer
Published on 13/05/2025 | Edited on 13/05/2025
நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சந்தானம் நடிப்பில் ஆர்யா வழங்கும் படம் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’. இதில் கீதிகா, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இப்படம் வருகிற 16ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்திற்கு ‘ஆஃப்ரோ’(ofRo) என்பவர் இசையமைத்துள்ள நிலையில் முதல் பாடலாக வெளியான ‘கிசா 47’(Kissa 47) சிலரிடம் எதிர்ப்பை சம்பாதித்தது. பாடலின் முதல் வரிகள், ‘ஸ்ரீனிவாசா கோவிந்தா…ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா…’ என ஆரம்பித்த நிலையில் இந்த வரிகள் பெருமாளை கிண்டல் செய்யும் படி இருப்பதாக சந்தானம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பா.ஜ.க. வழக்கறிஞர்கள் சார்பில் சேலத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இது குறித்து படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் சந்தானத்திடன் கேள்வி எழுப்பும் போது, சந்தானம் அதை மறுத்திருந்தார். மேலும் நான் பெருமாள் பக்தன், கடவுளை கிண்டல்செய்ய மாட்டேன் என விளக்கமளித்திருந்தார்.
இந்த நிலையில் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் தயாரிப்பாளர் மீது ஜனசேனா கட்சியில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆந்திரா திருமலை காவல் நிலையத்தில் அவர்கள் கொடுத்த புகாரில் பெருமாளை இழிவுபடுத்தி படத்தில் ஒரு பாடல் இடம்பெற்றிருப்பதாகவும் அதனை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. படம் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளதால் இப்போது கொடுத்திருக்கும் புகாரில் சற்று பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.