விளையாட்டு

ரோகித், கோலி ஓய்வு: ‘டெஸ்ட் கேப்டன் பதவிக்கு இவர்தான் தகுதியானவர்’- அஸ்வின் பேச்சு

Published

on

ரோகித், கோலி ஓய்வு: ‘டெஸ்ட் கேப்டன் பதவிக்கு இவர்தான் தகுதியானவர்’- அஸ்வின் பேச்சு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும், கேப்டனுமான ரோகித் சர்மா சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 7 ஆம் தேதி அறிவித்தார். ஏற்கனவே, சர்வதேச டி-20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர், ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஆடுவதாக தெரிவித்தார். ரோகித் சர்மாவின் ஓய்வு அறிவிப்பை தொடர்ந்து, முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி நேற்று திங்கள்கிழமை (மே.12) அன்று, சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஆடுவதில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஏற்கனவே, ரோகித்தின் திடீர் அறிவிப்பை தாங்க முடியாத ரசிகர்கள், கோலி இறக்கிய இந்த இடியால் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அவரின் எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், சர்வதேச டெஸ்ட் அரங்கில் இருந்து வெளியேறுவதாக ரோகித், கோலி அறிவித்திருக்கும் சூழலில், இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார்? என்கிற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது. அடுத்த கேப்டனாக இளம் வீரர் இருக்க வேண்டும் என சிலரும், அனுபவமிக்க வீரர் இருக்க வேண்டும் என சிலரும் சமூக வலைதள பக்கங்களில் பரபரப்பாக பேசி வருகிறார்கள். ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘Bumrah deserves captaincy’: Ashwin backs Jasprit for Test leadership role after Rohit-Kohli retirementஇந்த நிலையில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா இருக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலின் ‘ஆஷ் கி பாத்’ நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோடில் பேசுகையில், “ரோகித் ஓய்வு பெறுவதாக அறிவித்தபோது நாங்கள் கே.கே.ஆர் – சி.எஸ்.கே ஆட்டத்தின் நடுவில் இருந்தோம், பின்னர் இன்று, விராட்டும் கூட ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக விராட்டின் ஓய்வு பற்றிய செய்தியை நான் கேள்விப்பட்டு வந்தேன். ஆனால் அவர்கள் (பி.சி.சி.ஐ) அவருடன் பேசியிருக்க வேண்டும். அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். அதனை நான் இங்கே பேச விரும்பவில்லை. இந்திய கிரிக்கெட் அணிக்கு இது சோதனையான காலகட்டமாக இருக்கும் சூழலில், அவர்கள் இருவரும் இப்படி திடீரென்று ஓய்வு பெறுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இது கவுதம் கம்பீர் சகாப்தத்தின் தொடக்கம் என்று நான் நிச்சயமாகச் சொல்வேன். ஐந்து டெஸ்ட் போட்டிகளுக்காக இங்கிலாந்துக்கு கம்பீர் அழைத்துச் செல்லும் அணி முற்றிலும் புதிய அணியாக இருக்கும், முற்றிலும் மாற்றப்பட்ட அணியாக இருக்கும். அங்கு ஜஸ்பிரித் பும்ரா மூத்த வீரராக இருக்கலாம். வெளிப்படையாக சொல்வதென்றால், அவர் கேப்டன் பதவிக்கு விருப்பமும் கூட. அவர் கேப்டன் பதவிக்கு தகுதியானவர் என்று நான் நம்புகிறேன், ஆனால் இந்திய தேர்வாளர்கள் அவரது உடல் தகுதியின் அடிப்படையில் முடிவை எடுப்பார்கள்,” என்று அஸ்வின் கூறியுள்ளார்.  இதனிடையே, இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் பொறுப்பேற்க முன்னணியில் இருப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் அஜித் அகர்கர் தலைமையிலான மூத்த தேர்வுக் குழு, 25 வயதான கில் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்க சிறந்த வீரராக என்று கருதுகிறார்கள். இருப்பினும், தேர்வுக்குழுவினர் முறையான அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு பி.சி.சி.ஐ-யுடன் இது குறித்து விவாதிப்பார்கள். டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டால், கில்லின் முதல் பணி இங்கிலாந்தில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இருக்கும்.முன்னதாக, ஜூன் மாத இறுதியில் தொடங்கும் இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் துணை கேப்டனான பும்ராவுக்கு தலைமைப் பொறுப்பு வழங்கப்பட வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணியை வழிநடத்தினார். அவரது தலைமையிலான அணி 3 போட்டிகளில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றது .ஆனால் பும்ரா இங்கிலாந்தில் நடைபெறும் ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் இடம்பெற வாய்ப்பில்லை என்பதால், அவரது பணிச்சுமை மேலாண்மை காரணமாக தேர்வாளர்கள் வேறு வழியைக் கருத்தில் கொண்டுள்ளனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version