நக்கீரன் செய்திப்பிரிவு
Photographer
Published on 14/05/2025 | Edited on 14/05/2025
வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி, வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன் தாஸ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘ தி வெர்டிக்ட்’. முழுக்க முழுக்க அமெரிக்காவில் தயாராகியுள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கிருஷ்ணா சங்கர் இயக்கியுள்ளார். ஆதித்ய ராவ் இசையமைத்துள்ள இப்படம் கொலையும் கொலை சார்ந்த புலனாய்வுக் கதையுமாக உருவாகியுள்ளது. இப்படத்தை அக்னி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் மோகன் தாஸ் -என் கோபிகிருஷ்ணன் தயாரித்துள்ளனர். ஜகதா எண்டர்பிரைஸ் பிரைவேட் லிமிடெட் இப்படத்தை வெளியிடுகிறது.
இந்தத் திரைப்படம் மே மாதம் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பார்த்திபன் கலந்து கொண்டு பேசுகையில், “இங்கே பேசிய யூகி சேது எப்படிப்பட்டவர் என்று யூகிக்க முடியாத புத்திசாலி.
இந்த படத்தின் காட்சிகளைப் பார்த்த போது ஒன்று தோன்றியது. ‘ஹேராம்’ என்கிற தமிழ்ப்படம் வெளிவந்த போது கமல் சாரிடம் ‘இந்தப் படத்தின் தமிழ் உரிமையை எனக்குக் கொடுக்க முடியுமா ?’ என்று
ராதிகா கேட்டாராம். இந்தப் படக் காட்சிகளைப் பார்க்கும் போது அப்படித்தான் தோன்றியது. ஏனென்றால் அந்த அளவுக்கு வெறும் ஆங்கிலமாக இருந்தது. சில ஐந்தாறு வார்த்தைகள் தான் தமிழில் இருந்தது .
‘வெர்டிக்ட்’ என்ற தலைப்பில் படத்தைத் தேடிய போது ஒரு ஆங்கிலப் படம் 1982ல் வந்ததைப் பார்த்தேன் . இரண்டும் ஒரே மாதிரி தான் இருந்தது. கதையைச் சொல்லவில்லை. திரைப்பட உருவாக்கத்தில் அவ்வளவு தரமாக இரண்டும் ஒன்று போல் இருந்தது என்று சொல்கிறேன். எனது ‘இரவின் நிழல்’ படத்தில் வரலட்சுமி நடித்த போது எனக்கு பதற்றமாக இருந்தது. ஒரே ஷாட்டில் 2 மணி நேரத்தில் எடுக்க வேண்டும். சிறு தவறு நடந்தாலும் முதலில் இருந்து எடுக்க வேண்டும். ஆனால் படப்பிடிப்புக்கு சில நாள் முன்பு தான் வரலட்சுமியை கூப்பிட்டேன். அதில் வரலட்சுமி சரியாகச் செய்து பிரமாதமாக நடித்திருந்தார். இதில் தயாரிப்பாளர் நடிப்பதாக அறிந்தேன். தயாரிப்பாளர்கள் நடிக்க மட்டுமே சிலர் படம் எடுப்பார்கள். ஆனால் இதில் அப்படி இல்லை.
இங்கே சுஹாசினியை பார்க்கும்போது, அவரது அழகின் திமிர் தெரிந்தது. அவருக்கு அழகி என்ற திமிர் அதிகம். எனக்கு 50 வயது என்று அவர் சொன்ன போது அந்தத் திமிர் தெரிந்தது. 28 வயதுக்கு மேல் பெண்கள் வயதை மறந்து விட்டால் திமிர் போல் ஒரு அழகு இருக்கும். அது பேரழகு. எனக்கு மணிரத்னம் மீது காதல் ,மணிரத்தினத்திற்கு சுஹாசினி மீது காதல். ஆறு பெண்கள் நடித்த ஒரு ரஷ்யப் படத்தைப் பார்த்தேன். அதேபோல் இது ஐந்து பெண்கள் திறமை காட்டியுள்ளார்கள்” என்றார். பின்பு சுஹாசினி பார்த்திபனிடம் தனக்கு 63 வயது என சொன்னார். பின்பு பேசிய பார்த்திபன், “ஒரு பெண்ணின் அழகு 30 வயதுக்கு மேல் அறிவாக மாறும் போது அழகு. அதை 30 வயதுக்கு மேல் அறிவாக மாற்றலாம், அந்த அறிவையே அமைதியாக மாற்றலாம். அறிவாக மாறியதற்கு சுஹாசினி உதாரணம். அமைதியாக மாற்றியதற்கு அன்னை தெரசா உதாரணம். இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.