இந்தியா
8 முறை எம்.எல்.ஏ; ம.பி-யின் சர்ச்சை மன்னன்: யார் இந்த குன்வர் விஜய் ஷா?
8 முறை எம்.எல்.ஏ; ம.பி-யின் சர்ச்சை மன்னன்: யார் இந்த குன்வர் விஜய் ஷா?
பாகிஸ்தானின் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக மத்திய அரசு சார்பில் விளக்கம் அளித்தவர் ராணுவ கர்னல் சோபியா குரேஷி. அவரது மதத்தை வைத்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார் மத்திய பிரதேச பா.ஜ.க அமைச்சர் குன்வர் விஜய் ஷா. ராணுவ கர்னல் சோபியா குரேஷி பற்றி பொது நிகழ்வு ஒன்றில் அவர் பேசுகையில், “நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களை, அவர்களின் சகோதரியை வைத்து இந்தியா பாடம் கற்பித்துள்ளது” என்று கூறியிருந்தார். ஆங்கிலத்தில் படிக்கவும்: BJP minister under fire over veiled remark on Col Sofiya Qureshi: Who is Kunwar Vijay Shah?கர்னல் சோபியா இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் என்பதால், அவரை பயங்கரவாதிகளின் சகோதரி என சித்தரிக்கும் வகையில் அமைச்சர் குன்வர் விஜய் ஷா பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அவர் தனது உரையின் போது, அந்தக் கருத்தை மூன்று முறை மீண்டும் கூறியிருந்தார். ஆனால், இது பற்றி விளக்கம் அளிக்கையில், “எனது உரையை வேறு சூழலில் பார்க்கக்கூடாது. அவர்கள் நமது சகோதரிகள், அவர்கள் ஆயுதப்படைகளுடன் சேர்ந்து மிகுந்த பலத்துடன் பழிவாங்கியுள்ளனர்” என்று கூறினார்.யார் இந்த குன்வர் விஜய் ஷா? அமைச்சர் குன்வர் விஜய் ஷா, மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னணி பழங்குடி இனத் தலைவராகப் பார்க்கப்படுகிறார். இவர் பட்டியல் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஹர்சுத் தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக எட்டு தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். தற்போதைய பழங்குடி விவகாரங்கள், பொது சொத்து மேலாண்மை மற்றும் போபால் எரிவாயு துயர நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அமைச்சராக உள்ளார். அவர் இதுபோன்று சர்ச்சையில் சிக்குவது இது முதன்முறை அல்ல. கடந்த 2013 ஆம் ஆண்டில், அப்போதைய முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் மனைவி குறித்து பாலியல் ரீதியான கருத்துகள் தெரிவித்ததாகக் கூறப்பட்டதால், அவர் மாநில அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர் அவர் மீண்டும் பதவியேற்றார்.பெயர் வெளியிட விரும்பாத பா.ஜ.க தலைவர் ஒருவர் கூறுகையில், “ஹர்சுத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பழங்குடிப் பகுதிகளில் குன்வர் விஜய் ஷாவின் கணிசமான செல்வாக்கு, 12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சர்ச்சை தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொண்ட போதிலும், அவர் தொடர்ந்து பதவி வகிக்க உதவியது. அவரை ஓரங்கட்ட முடியாது, சவுகான் சகாப்த அமைச்சர்கள் பலர் நீக்கப்பட்ட போதிலும், தற்போது மோகன் யாதவ் அமைச்சரவையில் முக்கிய இலாகாக்களை அவர் வைத்திருக்கிறார்” என்று அந்தத் தலைவர் கூறினார்.பா.ஜ.க-வில் குன்வர் விஜய் ஷாவின் முக்கியத்துவம், மாநில மக்கள்தொகையில் சுமார் 21% ஆக இருக்கும் பழங்குடி வாக்காளர்கள் மீது கட்சி மீண்டும் கவனம் செலுத்துவதில் இருந்து வருகிறது. மேலும் அவர்களது வாக்குகள் மாநிலத்தின் 230 சட்டமன்ற இடங்களில் 47 இடங்களில் தேர்தல் முடிவுகளை பாதிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் காங்கிரஸ் பெற்ற 30 இடங்களுடன் ஒப்பிடும்போது பா.ஜ.க இந்த இடங்களில் 16 இடங்களை மட்டுமே வென்றது. அதனால், அம்மாநிலத்தில் அதிகாரத்தை இழந்தது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, கமல்நாத் நிர்வாகம் சரிந்ததைத் தொடர்ந்து 2020 இல் அரசாங்கத்தை அமைத்த பா.ஜ.க ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதால் அதன் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது.2018 ஆம் ஆண்டில், திருநங்கைகள் சமூகத்தைப் பற்றிய குன்வர் விஜய் ஷாவின் வெளிப்படையான கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடியின் முன்னோடிகள் குறித்த தனது “அவமானகரமான கருத்துக்களால்” அவர் மீண்டும் பா.ஜ.கவை கவலையில் ஆழ்த்தினார். “நாடு சுதந்திரம் பெற்று எழுபத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன, ஆனால் ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் முதல் தலைவர் மோடி. அவருக்கு முன்பு, அனைத்து பிரதமர்களும் கோடா, காடா மற்றும் ஹாத்தி சாப். அவர்களில் யாரும் ஏழைகளைப் பற்றி கவலைப்படவில்லை,” என்று குன்வர் விஜய் ஷா கூறியிருந்தார். இதன் பின்னர் 2022 இல், குன்வர் விஜய் ஷா காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்து, “அவருக்கு 55-56 வயது, திருமணமாகவில்லை. என் மகனுக்கு 28 வயது, ஏற்கனவே திருமணமானவர். ஒரு குடும்பத்தில், உங்கள் குழந்தை 25 வயதில் திருமணமாகவில்லை என்றால், அண்டை வீட்டார் கேள்விகளை எழுப்புகிறார்கள்.” என்று அவர் பேசியிருந்தார். இதேபோல், குன்வர் விஜய் ஷா கல்வி அமைச்சராக இருந்த காலத்தில், மாணவர்கள் வகுப்பில் வருகைப் பதிவு எடுக்கும் போது “ஜெய் ஹிந்த்” என்று பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிறுபான்மை மக்களுக்கு மறைமுக அச்சுறுத்தலாகக் கருதப்பட்ட இந்த சம்பவத்தில், அவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேசிய கீதம் இசைக்கப்படாத பள்ளிகள் மற்றும் மதரஸாக்களுக்கான அரசு உதவியை நிறுத்துவதாக எச்சரித்தார்.டிசம்பர் 2024 இல் வனவிலங்கு ஆர்வலர்களின் விமர்சனங்களுக்கு குன்வர் விஜய் ஷா ஆளானார், மேலும் சத்புரா புலிகள் காப்பகத்தின் மையப் பகுதியில் அவர் “சுற்றுலாவை அனுபவிப்பது” போன்ற வீடியோக்கள் வெளியானதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டது. அந்த வீடியோவில் அவர் வன கண்காணிப்பு கோபுரத்தின் மேல் நின்று கொண்டு இரண்டு ஆண்கள் சமைப்பதைக் காட்டியது. “இன்றைய நாள் உண்மையான பிக்னிக். இது ஒரு சிறந்த சுற்றுலா” என்று அந்த வீடியோவில் அமைச்சர் குன்வர் விஜய் ஷா கூறியிருந்தார்.