நக்கீரன் செய்திப்பிரிவு
Photographer
Published on 15/05/2025 | Edited on 15/05/2025
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின. இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், தாக்குதல்களை நிறுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்தது.
இந்த தாக்குதலை நிறுத்தியது அமெரிக்கா தான் என்றும், வர்த்தகத்தை முன்னிறுத்தி தான் இந்தியா – பாகிஸ்தானுடனான தாக்குதலை நிறுத்தினேன் என்றும் டிரம்ப் தெரிவித்தார். இந்த விவகாரம் ஒட்டுமொத்த நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா அதிபர் விட்ட எச்சரிக்கைக்கு கட்டுப்பட்டு பாகிஸ்தானுடனான தாக்குதல் நிறுத்தத்துக்கு இந்தியா ஒப்புகொண்டதா? என்ற கேள்வி விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், இந்தியாவில் கட்டுமானங்கள் மேற்கொள்ள வேண்டும் என ஆப்பிள் நிறுவன சி.இ.ஓவிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து மேலும் பரபரப்பை கூட்டியுள்ளார். கத்தார் நாட்டில் நடந்த வணிக மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டார். அப்போது அவர், ஆப்பிள் சி.இ.ஓ டிம் குக்குடன் தனக்கு ஒரு சிறிய பிரச்சனை இருப்ப்பதாகக் கூறினார். இது குறித்து டிரம்ப் கூறியதாவது, “நான் ஆப்பிள் சி.இ.ஓ டிம் குக்கிடன் சொன்னேன், நான் உங்களை மிகவும் நன்றாக நடத்துகிறேன். நீங்கள் 500 பில்லியன் டாலருடன் வருகிறீர்கள், ஆனால் இப்போது நீங்கள் இந்தியா முழுவதும் கட்டுமானங்கள் கட்டுவதாகக் கேள்விப்பட்டேன். இந்தியாவில் ஆப்பிள் கட்டுமானங்கள் கட்டுவதை நான் விரும்பவில்லை. நீங்கள் இந்தியாவை கவனித்துக் கொள்ள விரும்பினால், இந்தியாவில் கட்டலாம். ஏனென்றால் உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றானது இந்தியா. எனவே, இந்தியாவில் விற்பனை செய்வது மிகவும் கடினம் எனக் கூறினேன்.
இந்தியா எங்களுக்கு ஒரு ஒப்பந்தத்தை வழங்கியது. அதன் அடிப்படையில் அவர்கள் எங்களிடம் எந்த வரியும் வசூலிக்க ஒப்புக்கொண்டதில்லை. நான் டிம் குக்கிடம், நாங்கள் உங்களை மிகவும் நன்றாக நடத்துகிறோம், நீங்கள் பல ஆண்டுகளாக சீனாவில் கட்டிய அனைத்து ஆலைகளையும் நாங்கள் பொறுத்துக்கொள்கிறோம். ஆனால், இந்தியாவில் நீங்கள் கட்டுவதில் எங்களுக்கு ஆர்வம் இல்லை. இந்தியா தங்களை கவனித்துக் கொள்ளட்டும் என சொன்னேன்” என்று கூறினார். இந்தியாவுக்கு நட்பு நாடாக இருக்கும் அமெரிக்கா, தற்போது ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் இரண்டு இடத்திலும், கர்நாடகாவில் ஒரு இடத்திலும் என ஆப்பிள் நிறுவனத்திற்கு தற்போது இந்தியாவில் மூன்று கட்டுமானங்கள் உள்ளன. இவற்றில் ஒன்று, ஃபாக்ஸ்கான் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது, மற்றொன்று டாடா குழுமத்தால் இயக்கப்படுகிறது. மேலும் இரண்டு ஆப்பிள் ஆலைகள் தயாரிப்புப் பணிகளில் உள்ளன.
கடந்த நிதியாண்டின் மதிப்புபடி, ஆப்பிள் இந்தியாவில் $22 பில்லியன் மதிப்புள்ள ஐபோன்களை தயாரித்தது. இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது உற்பத்தியில் 60 சதவீதம் அதிகமாகும்.
- “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
- “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்