இந்தியா
ஆளுநர் – முதல்வர் மோதல்: மாநில வளர்ச்சிக்கு நல்லதல்ல: புதுச்சேரி அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் பேச்சு
ஆளுநர் – முதல்வர் மோதல்: மாநில வளர்ச்சிக்கு நல்லதல்ல: புதுச்சேரி அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் பேச்சு
புதுச்சேரி துணைநிலை ஆளுநர்-முதல்வர் மோதல் போக்கு மாநில வளர்ச்சிக்கு நல்லதல்ல, இருவரும் அமர்ந்து பேசினால்தான் மாநில வளர்ச்சியை நோக்கி செல்ல முடியும் என புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் கூறினார்.இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக கைலாஷ்நாதன் பதவியேற்றத்திலிருந்து ஆளும் அரசு சார்பில் அனுப்பப்படும் அனைத்து மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பான கோப்புகளுக்கும் துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்து, அதனை செயல்வடிவம் கொடுத்து வருகிறார். இதனால், மாநிலத்தில் ஏற்கனவே தடைபட்டிருந்த மக்கள் நலன் சார்ந்த பணிகளும் முழுமையடைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக துணைநிலை ஆளுநர்-முதலமைச்சர் ஆகியோருக்கு பணிப்போர் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இது மாநில வளர்ச்சிக்கு நல்லதல்ல துணைநிலை ஆளுநரும், முதலமைச்சரும் அமர்ந்து பேச வேண்டும் அப்போது தான் மாநில வளர்ச்சியை நோக்கி செல்ல முடியும். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் 10 மாதங்கள் இருக்கும் சூழலில் முதலமைச்சர் மற்றும் துணை ஆளுநர்களுக்கு இடையே ஏற்பட்ட பனிபோர் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு எதிராக அமையும். மேலும், தனியார் மருத்துவ கல்லூரியில் 50% இடங்களை அரசின் இடஒதுக்கீடாக ஆளுநரும் முதலமைச்சரும் இணைந்து பெற்று தர வேண்டும். பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிசூட்டில் அப்பாவி சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக தலைமையிலான இந்திய அரசு 16-ம் நாளில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி 150-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்று குவித்தது. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியது. பாகிஸ்தான் இந்தியா மீது நடத்த முயன்ற வான்வழி தாக்குதலை இந்திய ராணுவம் தடுத்து தவிடுபொடியாக்கியது. இந்தியாவின் துள்ளிய தாக்குதலினால் காஷ்மீரில் உள்ள 8-க்கும் மேற்பட்ட விமான தளங்கள் நிர்மூலமாக்கப்பட்டன. இந்த தாக்குதலினால் கதிகலங்கி போன பாகிஸ்தான் சமாதான தூதுவிட்டதன் விளைவாக தாக்குதல் நிறுத்தப்பட்டது. இதை உலகத்தில் உள்ள 99% நாட்டின் தலைவர்களும் நம் நாட்டு பிரதமர் மோடி அவர்களின் ராஜதந்திரத்தை பாராட்டுகின்றனர்.ஆனால் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட ஒருசில கட்சிகள் கேவலம் ஓட்டு வங்கிக்காக ஏதோ நாம் பாதியிலேயே போரை நிறுத்திவிட்டதாகவும், அதற்கு பிரதமர் மோடி தான் காரணம் என பிரதமரை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதலமைச்சர் வைத்திலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். இது தேசத்திற்கும், ராணுவ நடவடிக்கைக்கும் அரசின் போர்க்கால ராஜதந்திர நடவடிக்கைக்கும் எதிரான குற்கச்சாட்டாகும். தேசப்பற்றை பற்றி பேச காங்கிரஸ் கட்சிக்கு எந்த அறுகதையும், தகுதியும் கிடையாது.2008-ம் ஆண்டு நவ.26-ம் தேதி காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் மும்பையில் உள்ள பிரபல தாஜ் ஓட்டலில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 250-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். 600-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் படுகாயமடைந்தனர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியது கண்கூடாக தெரிந்தும் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் மீதோ, முகாம்கள் மீதோ அப்போதைய காங்கிரஸ் அரசு எவ்வித எதிர் தாக்குதலை நடத்தவில்லை. பாகிஸ்தான் மீது போர் தொடுத்தால் ஒரு சமூகத்தின் வாக்கு வங்கியை இழந்துவிடுவோம் என்ற அற்ப அரசியலுக்காக நம் நாட்டையே பாகிஸ்தானிடம் அடமானம் வைத்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர். அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியினரிடம் தேசப்பற்றை எதிர்பார்க்க முடியாது தான். நம் நாட்டின் எல்லை தாண்டிய தீவிரவாதிகளின் தாக்குதல்கள் குறித்தும், தாக்குதலுக்கு உத்தரவிட்ட நம் நாட்டு பிரதமரின் நடவடிக்கைகள் குறித்து குற்றம் சுமத்தியோ, குறைகூறியோ யார் பேசினாலும் அவர்கள் மீது போர்க்கால சட்ட அடிப்படையில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆரம்பநிலையிலேயே உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.நேற்று முன்தினம் வெளியான சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் அதிமுக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த ஆண்டு தான் முதன் முறையாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் அரசு பள்ளியில் படிக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதினர். இதில் குறிப்பாக 10-ம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர். அதிலும் சவரிராயுலு நாயக்கர் அரசு பள்ளி மாணவிகள் அதிக அளவில் அறிவியல் பாடத்தில் தோல்வியை தழுவியுள்ளனர். அரசானது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்தினாலும் மாணவர்களுக்கு சிபிஎஸ்இ பாடத்தை கற்றுக்கொடுக்க போதிய திறமைவாய்ந்த ஆசிரியர்கள் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. முதலில் ஆசிரியர்களுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கைதேர்ந்தால் தான் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க முடியும். எனவே அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை கற்றுக்கொடுக்க அதிக அளவிலான பயிற்சியை புதுச்சேரி அரசு கல்வித்துறை வழங்க வேண்டும். இதுமட்டுமல்லாமல் அதிக மாணவர்கள் தோல்வியை தழுவியுள்ளதால் வருகிற 30-ம் தேதிக்குள் மறுதேர்வு நடத்த அறிவித்து விண்ணப்பங்களை கல்வித்துறை வழங்க வேண்டும். தோல்வியடைந்த பிள்ளைகளுக்கு தனி கவனம் செலுத்தி மீண்டும் அந்த மாணவர்கள் தேர்ச்சியடைய ஆசிரியர்கள் துணைநிற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.அப்போது மாநில கழக துணைச் செயலாளர்கள் நாகமணி, கிருஷ்ணமூர்த்தி, நெட்டப்பாக்கம் தொகுதி கழக செயலாளர் முகம்மது யூசுப், மாவட்ட பிரதிநிதி ரகுநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.