இலங்கை
இறுதிப்போரின் போது இனப்படுகொலை நிகழவேயில்லை!
இறுதிப்போரின் போது இனப்படுகொலை நிகழவேயில்லை!
அநுர அரசாங்கம் அறிவிப்பு: கனடாவுக்கும் கண்டனம்!
இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரின்போது, இனப்படுகொலை இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யானது என்று ஜனாதிபதி அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகளில் உயிரிழந்தவர்களின் நினைவாக கனடாவின் பிரம்டன் நகரில் நினைவாலயமொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவாலயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சு கண்டன அறிக்கையொன்று வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது:
இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தேசிய ரீதியிலோ அல்லது சர்வதேச ரீதியிலோ எந்தவொரு அதிகாரியாலும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை. ஆதலால், இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்கள் அனைத்துமே தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட கருத்துக்களாகவே அமைந்துள்ளன.
பிரம்டன் நகரில், தமிழர் இனப்படுகொலை நினைவாலயத்தை அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புக்களை இலங்கை அரசாங்கம் பலமுறை கண்டித்துள்ளது. பிரம்டன் நகர சபையின் இத்தகைய வருந்தத்தக்க முயற்சியைத் தலையிட்டுத் தடுக்குமாறு, கனடாவின் மத்திய அரசை இலங்கை தொடர்ந்தும் வலியுறுத்தும். இந்த நடவடிக்கைகள் இலங்கைக்கும், கனேடிய சமூகங்களுக்கும் எதிரானதாகவே இலங்கை அரசாங்கம் கருதுகின்றது. அத்துடன், இத்தகைய நடவடிக்கைகள் பொதுமக்களைத் தவறாக வழிநடத்துவது மட்டுமல்லாமல், அனைத்து இன மக்களுக்கும் இடையில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தும் இலங்கையின் முயற்சியை சீர்குலைப்பதாகவே அமையும்.
2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கனடாவின் வெளிவிவகார அமைச்சு, இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக கனடா இன்னமும் உறுதிப்படுத்தவில்லை என்று அறிவித்திருந்தது. அத்துடன், 2024ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை மீண்டும் உறுதிப்படுத்தியது என்பதையும் நாம் நினைவூட்டுகின்றோம்- என்றுள்ளது.
முன்னதாக, பிரம்டன் நகரில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயம் தொடர்பில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இலங்கைக்கான கனேடியத் தூதுவரைச் சந்தித்துத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.