இலங்கை
வவுனியாவில் ஆட்சியமைக்க சங்கும் வீடும் புரிந்துணர்வு!
வவுனியாவில் ஆட்சியமைக்க சங்கும் வீடும் புரிந்துணர்வு!
வவுனியாவில் உள்ள சபைகளில் ஆட்சியமைப்பதற்காக, இலங்கைத் தமிழரசுக் கட்சியும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையில் புரிந்துணர்வின் அடிப்படையில் உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணிக்கும், இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது. இதன்போது எமக்கிடையே புரிந்துணர்வில் அடிப்படையில் சில உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
அதாவது, சபைகளில் அதிக வாக்குகளை பெற்றுள்ள தரப்பு ஆட்சியமைப்பதற்காக மற்றைய தரப்பினர் ஒத்துழைப்பை வழங்குவது என்று தீர்மானித்துள்ளோம். இதன்படி, வவுனியா மாநகரசபையில் சங்குக் கூட்டணி ஆட்சியமைப்பதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி முழுமையான ஆதரவை வழங்கும். அதேபோல் வவுனியா தெற்கு, வவுனியா வடக்கு, செட்டிகுளம் பிரதேசசபைகளில் தமிழரசுக்கட்சி கூடிய ஆசனங்களை பெற்றுள்ளமையால் அங்கு தமிழரசுக் கட்சி ஆட்சியமைக்கும். இதற்கு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி ஆதரவை வழங்கும். சுயேச்சைக் குழுக்களில் போட்டியிட்டவர்களின் ஆதரவைப் பெறுவதற்கும் நாங்கள் தீர்மானித்துள்ளோம் – என்றார்.