நக்கீரன் செய்திப்பிரிவு
Photographer
Published on 17/05/2025 | Edited on 17/05/2025
சூரி கதையின் நாயகனாக புதிதாக நடித்துள்ள ‘மாமன்’ படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் சூரி நடித்தது மட்டுமல்லாமல் கூடுதலாக கதையும் எழுதியுள்ளார். இப்படத்தை விலங்கு வெப் சீரிஸ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், இயக்கியிருக்க ‘கருடன்’ படத் தயாரிப்பாளர் லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் கே. குமார் தயாரித்துள்ளார். சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெட்சுமி நடித்திருக்க முக்கிய கதாபாத்திரங்களில் ராஜ்கிரண், சுவாசிகா, விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹேஷாம் அப்துல் வஹாப் என்பவர் இசையமைத்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
நேற்று முன் தினம் இப்படம் வெற்றி பெற வேண்டி மதுரையில் உள்ள சூரியின் ரசிகர்கள் சிலர் முருகன் கோயிலில் மண் சோறு சாப்பிட்டு சிறப்பு வழிபாடு செய்தனர். இந்த செயலை அறிந்து சூரி ஒரு செய்தியாளர் சந்திப்பில் அவர்களை கண்டித்தார். அவர் கூறியதாவது, அவர்கள் செய்தது முட்டாள்தனமாக செயல், அதை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது, படம் நன்றாக எடுத்தால் ஓடும், மண் சோறு சாப்பிட்டால் எப்படி ஓடும், அவர்கள் எனக்கு ரசிகர்களாக இருக்க தகுதியில்லாதவர்கள் என கடுமையாக சாடினார். சூரியின் இந்த கண்டிப்பு பலரது கவனத்தை பெற்று வருகிறது.
இந்த நிலையில் பாடலாசிரியர் வைரமுத்து, சூரியின் செயலை பார்த்து ‘பலே பாண்டியா’ என பாராட்டுவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “திரைக்கலைஞர் தம்பி சூரியைப் பாராட்டுகிறேன். தனது திரைப்பட வெற்றிக்காக மண்சோறு தின்ற ரசிகர்களைப் பகிரங்கமாகச் சாடியிருக்கிறார். மண்ணிலிருந்து தானியம் வரும்; தானியம் சோறாகும். ஆனால், மண்ணே சோறாக முடியாது. இந்த அடிப்படைப் பகுத்தறிவு இல்லாதவர்கள் தன் ரசிகர்களாக இருக்கமுடியாது என்று சொல்வதற்குத் துணிச்சல் வேண்டும்.
கதாநாயகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ரசிகர் கூட்டத்தை இப்படி நெறிப்படுத்தி வைத்திருந்தால் கலையும் கலாசாரமும் மேலும் மேலும் மேம்பட்டிருக்கும். மண்சோறு தின்றால் ஓடாது மக்களுக்குப் பிடித்தால் மாமன் ஓடும். பகுத்தறிவு காத்திருக்கும் சூரியை ‘பலே பாண்டியா’ என்று பாராட்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.