சினிமா
மண்ணே சோறா..?– பகுத்தறிவு பேசும் சூரிக்கு வைரமுத்துவின் ‘பலே பாண்டியா’ பாராட்டு..!
மண்ணே சோறா..?– பகுத்தறிவு பேசும் சூரிக்கு வைரமுத்துவின் ‘பலே பாண்டியா’ பாராட்டு..!
பாரம்பரிய சினிமா கதையம்சங்களை மையமாகக் கொண்டிருக்கும் ‘மாமன்’ திரைப்படம், சூரியின் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில், ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படம், வெளியான முதல் நாளே நல்ல விமர்சனங்களையும் ரசிகர்களின் ஆதரவையும் பெற்று வருகின்றது.சூரியின் ரசிகர்கள் ‘மாமன்’ வெற்றிக்காக மேற்கொண்ட ஒரு விசித்திர நிகழ்வு இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த நிகழ்வினை சூரி எதிர்த்ததை தற்பொழுது கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார்.மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் பகுதியில், சூரி ரசிகர்கள், ‘மாமன்’ திரைப்படம் வெற்றியடைய வேண்டி “மண்சோறு சாப்பிட்டு” விரதம் இருந்தனர். பழங்கால சடங்குகளின் ஒரு வடிவமாகக் கருதப்படும் இந்த செயல், இன்று மீடியாவில் வியப்பையும், விமர்சனத்தையும் கிளப்பியது. இந்த செய்தி சூரியின் காதில் விழுந்ததும், அவர் பொதுவெளியில் அதிரடியான பதிலை அளித்தார். அதன்போது சூரி, “இது ரொம்ப முட்டாள் தனமானது. இப்படி செய்பவர்கள் எனது ரசிகர்களாக இருக்க தகுதி இல்லாதவர்கள். இதெல்லாம் வேணாம்!” என்று கூறினார். இந்த நேரடி கண்டனம், ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, பலரிடையே பாராட்டையும் பெற்றுள்ளது.இந்நிலையில், தமிழ் கவிதை உலகின் முக்கிய நபராக விளங்கும் கவிஞர் வைரமுத்து, சூரியின் செயலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தனது சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிட்ட உரையால், சூரி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அதன்போது வைரமுத்து, “திரைக்கலைஞர் தம்பி சூரியை பாராட்டுகிறேன். தனது திரைப்பட வெற்றிக்காக மண்சோறு தின்ற ரசிகர்களைப் பகிரங்கமாகச் சாடியிருக்கிறார். மண்ணிலிருந்து தானியம் வரும்; தானியம் சோறாகும். ஆனால், மண்ணே சோறாக முடியாது.” என்று தெரிவித்திருந்தார். மேலும், “மாமன் ஓட வேண்டுமானால் மக்கள் விரும்ப வேண்டும். மண்சோறு தின்றால் ஓடாது” என்கிறார் வைரமுத்து. இக்கருத்துக்கள் சினிமா என்பது பக்தியின் வெளிப்பாடு அல்ல; கலை, வியாபாரம், கருத்து ஆகிய அனைத்தையும் கலந்த நுண்ணிய உருப்படி என்பதை நினைவூட்டுகிறது.