இந்தியா
பாராட்டு விழாவை புறக்கணித்த மகாராஷ்டிரா உயர் அதிகாரிகள்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கடும் சாடல்
பாராட்டு விழாவை புறக்கணித்த மகாராஷ்டிரா உயர் அதிகாரிகள்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கடும் சாடல்
இந்திய உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் கடந்த 14 ஆம் தேதி பதவியேற்றார். இந்நிலையில், தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் முதல்முறையாக தனது சொந்த மாநிலமான மஹாராஷ்டிராவுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்தார். அப்போது மும்பையில் நடந்த பாராட்டு விழாவில் அவர் பங்கேற்றார். மஹாராஷ்டிரா மற்றும் கோவா மாநில வழக்கறிஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் மாநில தலைமைச் செயலர், டி.ஜி.பி மற்றும் மும்பை போலீஸ் கமிஷனர் என யாரும் பங்கேற்கவில்லை. மேலும், தங்கள் மாநிலத்திற்கு வருகை தந்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு எந்தவொரு உயர் அதிகாரிகளும் வரவேற்பு அளிக்கவில்லை. ஆங்கிலத்தில் படிக்கவும்: On Maharashtra visit, CJI Gavai miffed over absence of top officials at eventஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒரு மாநிலத்திற்கு செல்லும் போது, அம்மாநிலத்தின் தலைமைச் செயலர், டி.ஜி.பி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் வரவேற்க வேண்டும் என்பது மரபு. இந்நிலையில், தனக்கு மரியாதை செலுத்தும் வகையில் நடைபெற்ற பாராட்டு நிகழ்வில் மாநிலத்தின் மூத்த அதிகாரிகள் ஒருவர் கூட பங்கேற்காதது குறித்து கடுமையாக சாடியுள்ளார் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய். “அரசியலமைப்பின் ஒவ்வொரு அங்கமும், மற்றொன்றுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பாராட்டு விழாவில் பேசுகையில், “ஜனநாயகத்தின் மூன்று தூண்கள், நீதித்துறை, சட்டமன்றம் மற்றும் நிர்வாகத்துறை என்றும், அவை சமமானவை என்றும் நாம் கூறுகிறோம். அரசியலமைப்பின் ஒவ்வொரு அங்கமும் மற்ற உறுப்புகளுக்கு ஈடாகவும், உரிய மரியாதையுடனும் செயல்பட வேண்டும். மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக இந்திய தலைமை நீதிபதியாக மாநிலத்திற்கு வருகிறார். மகாராஷ்டிராவின் தலைமைச் செயலாளர், மாநில காவல்துறை இயக்குநர் ஜெனரல் அல்லது மும்பை காவல்துறை ஆணையர் வர வேண்டிய அவசியமில்லை என்று நினைத்தால், அதைப் பற்றி அவர்கள் சிந்திக்க வேண்டும்.நெறிமுறைகள் புதிய ஒன்றல்ல. ஒரு அரசியலமைப்பு மற்றொரு அமைப்புக்கு அளிக்கும் மரியாதையைப் பற்றியது. ஒரு அரசியலமைப்பின் தலைவர் முதல்முறையாக மாநிலத்திற்கு வரும் போது, அவர்கள் நடத்தப்படும் விதத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த நெறிமுறைகளை நீதிபதிகளில் ஒருவர் மீறியிருந்தால், அரசியல்சாசனப்பிரிவு 142 பற்றிய விவாதம் எழுந்திருக்கும். இவை சிறிய விஷயங்களாக தோன்றலாம். ஆனால், அது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.நாங்கள் நீதிபதிகளாக நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்கிறோம். நாங்கள் நாகாலாந்து, மணிப்பூர், அசாம் மற்றும் சமீபத்தில் அமிர்தசரஸ் சென்றோம். அங்கு டி.ஜி.பி, தலைமைச் செயலாளர், காவல் ஆணையர் ஆகியோர் உடனிருந்தனர். நான்கு வாரங்களுக்கு முன்பு நாங்கள் ஜார்க்கண்டில் உள்ள தியோகருக்குச் சென்றோம். இது தலைநகர் ராஞ்சியிலிருந்து சுமார் 300-400 கி.மீ தொலைவில் உள்ளது. தலைமைச் செயலாளர் மற்றும் பிறரும் அங்குள்ள விமான நிலையத்தில் இருந்தனர்.” என்று அவர் கூறினார்.இந்த நிகழ்வுக்குப் பின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அம்பேத்கர் நினைவிடத்திற்கு சென்ற நிலையில், பாராட்டு விழாவில் அதிருப்தி தெரிவித்து பேசியது குறித்து அறிந்த உடன் தலைமைச் செயலர் சுஜாதா சவுனிக், டி.ஜி.பி ராஷ்மி சுக்லா மற்றும் மும்பை போலீஸ் கமிஷனர் தேவன் பாரதி ஆகியோர் அங்கு சென்று தலைமை நீதிபதியை சந்தித்தனர்.பாராட்டு நிகழ்வில் உயர் அதிகாரிகள் இல்லாதது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளின் கருத்து கேட்க முயன்றபோது, தலைமைச் செயலாளர் சவுனிக் மற்றும் மகாராஷ்டிரா அமைச்சர் ஜெயக்குமார் ராவல் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.