இலங்கை
பெரமுனவின் ஏற்பாட்டிலும் படைவீரர் நினைவு தினமாம்
பெரமுனவின் ஏற்பாட்டிலும் படைவீரர் நினைவு தினமாம்
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய படைவீரர் நினைவு தினம் இன்று நடைபெறும் நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் படை வீரர் நினைவு தினத்தை நடத்தவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் நாளை 20 ஆம் திகதி இந்த நிகழ்வு நடைபெறும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:-
தேசிய படை வீரர் நினைவு தின நிகழ்வில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கட்டாயம் பங்கேற்க வேண்டும். ஜனாதிபதி பங்கேற்கமாட்டார் என எமக்குத் தகவல் கிடைத்த பின்னர், படை வீரர் நினைவு தினத்தை மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடத்த அனுமதி கோரினோம். அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
எனவே மே 20 ஆம் திகதி நாம் படையினரை நினைவு கூருவோம். அதற்குரிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்கு படையினர் நினைவுத்தூபிக்கு முன்பாக நாட்டுக்குரிய எமது கடமை நிறைவேற்றப்படும். இந்தநாட்டை நேசிக்கும் அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்-என்றார்.