உலகம்
அமெரிக்காவில் சூறாவளி; 28 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவில் சூறாவளி; 28 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவின் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களான கென்டக்கி, மிசோரி, விர்ஜீனியாவை அடுத்தடுத்து கடுமையான சூறாவளி தாக்கியதில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சூறாவளியினால் கென்டக்கி மாகாணமே கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளதாகவும் அப்பகுதியில் மாத்திரம் ஒரு தீயணைப்பு வீரர் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில் நுாற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்ததுடன் வாகனங்கள் பலவும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிசோரியின் செயின்ட் லூயிஸ் பகுதியில் மணிக்கு 140 கி.மீ, வேகத்தில் சூறாவளி காற்று வீசியுள்ளதோடு கனமழை மற்றும் புழுதிப் புயலும் வீசியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக அப் பகுதி வாழ் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆயிரக்கணக்கான வீடுகள், வணிக நிறுவனங்கள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியுள்ளதாகவும், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமெரிக்கா முழுவதும் சில தினங்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், சூறாவளி வீசும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இதேவேளை டெக்சாஸ் மற்றும் அர்கான்சாஸ் பகுதிகளுக்கும் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.