இலங்கை
சந்தேகநபர்களின் உயிரை காப்பது பொலிஸ் அதிகாரிகளின் பொறுப்பு
சந்தேகநபர்களின் உயிரை காப்பது பொலிஸ் அதிகாரிகளின் பொறுப்பு
இலங்கை மன்னிப்புச் சபை தெரிவிப்பு
கைது செய்யப்படும் சந்தேகநபர்களின் உயிரைப் பாதுகாப்பது பொலிஸ் அதிகாரிகளின் பொறுப்பாகும். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உயிர்வாழும் உரிமை உண்டு என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பில் நேற்றுமுன்தினம் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர் எல்.டீ.பி. தெஹிதெனிய தெரிவித்ததாவது-
கடந்த சில நாள்களாக பொலிஸ் நிலையங்களின் சிறைக்கூண்டுகளில் தடுத்து வைக்கப்படும் சந்தேக நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்படும் சந்தேக நபர்களும் உயிரிழக்கும் சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளன. இது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.
கைது செய்யப்படும் சந்தேக நபர்கள் குற்றவாளியா, இல்லையா என்பதை உறுதி செய்வதும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகளை வழங்குவதும் சட்டத்தின் பொறுப்பாகும். அதேபோல கைது செய்யப்படும் சந்தேக நபர்களின் உயிரைப் பாதுகாப்பது பொலிஸ் அதிகாரிகளின் பொறுப்பாகும். சந்தேக நபர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளனவா என்பனவற்றை ஆராய்ந்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடாகும்.
ஒரு சந்தேக நபரை கைது செய்யும்போது பொலிஸ் அதிகாரிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டிக் கையேடு ஒன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் இந்த கையேட்டில் குறிப்பிடப்படும் விடயங்களை நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும்-என்றார்.