இலங்கை
மரண வீட்டிற்கு சென்ற யுவதி மாயம்; திருமணம் முடிக்கவிருந்த இளைஞன் திகைப்பு
மரண வீட்டிற்கு சென்ற யுவதி மாயம்; திருமணம் முடிக்கவிருந்த இளைஞன் திகைப்பு
களுத்துறை – மீகம தர்கா நகரத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதி காணாமல்போயுள்ளதாக வெலிபென்ன பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
மீகம தர்கா நகரத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதி ஒருவர் கடந்த 16 ஆம் திகதி தனது பாட்டியுடன் இறுதிச் சடங்கு வீடொன்றுக்குச் சென்றுள்ளார்.
பின்னர் பாட்டியும் யுவதியும் பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு சென்றுள்ள நிலையில் யுவதி பல்பொருள் அங்காடிக்கு வெளியே நின்றுக்கொண்டிருந்துள்ளார்.
பல்பொருள் அங்காடிக்குள் சென்ற பாட்டி பொருட்களை கொள்வனவு செய்துவிட்டு வெளியே வந்து பார்த்த போது யுவதி காணாமல்போயுள்ளதை அறிந்துள்ளார்.
இதனையடுத்து யுவதியை பல இடங்களில் தேடியுள்ள பாட்டி , யுவதியை கண்டுபிடிக்க முடியாததால் மீண்டும் வீடு திரும்பி இது தொடர்பில் யுவதியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் யுவதியின் பெற்றோர் இது தொடர்பில் யுவதியை திருமணம் முடிக்கவிருந்த இளைஞனிடம் கூறியுள்ளனர்.
இதன்போது அந்த இளைஞன், காணாமல்போன யுவதி தனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரு பெண்களுடன் களுத்துறை பகுதிக்குச் செல்வதாகவும் மாலை நேரத்தில் அளுத்கம கடற்கரை பகுதிக்கு வருமாறு தன்னிடம் கூறியதாக யுவதியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து யுவதியின் பெற்றோர் இது தொடர்பில் வெலிபென்ன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
யுவதியுடன் சென்ற இரண்டு பெண்கள் குறித்து எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் யுவதியின் பெற்றோர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் வெலிபென்ன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.