இலங்கை
அதிவேக வீதிகளில் இன்று முதல் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம்
அதிவேக வீதிகளில் இன்று முதல் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம்
இலங்கையின் அதிவேக வீதிகளில் இன்று முதல் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தலாம் என இலங்கை போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ் அதிவேக வீதிகளில் கட்டணம் வாயில்களில் வங்கி அட்டைகள் பணம் செலுத்தும் புதிய கட்டண முறை இன்று (21) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டதாவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அட்டை கட்டண வசதி தெற்கு அதிவேக வீதி, கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக வீதி மற்றும் மத்திய அதிவேக வீதியின் மீரிகம – குருநாகலை அதிவேக வீதி ஆகியவற்றில் செயல்படுத்தப்படும்.
இந்த திட்டத்தின் சீரான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக, நிலையான செயல்பாட்டுத் திட்டத்தின்படி முதற்கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, கட்டணம் வாயில்களில் வாகன சாரதிகளுக்கு உதவ பயிற்சி பெற்ற அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மூன்று அதிவேக வீதிகளிலும் 35 இடமாறும் பகுதிகள் மற்றும் 119 வெளியேறும் வாயில்களில் புதிய சேவை செயற்பாட்டில் உள்ளது.
இது பயணிகளுக்கு கட்டணங்களைச் செலுத்துவதற்கு வசதியாக பணமில்லா பரிவர்த்தனைக்கு வழிவகுக்கிறது.
அரச சேவைகளை நவீனமயமாக்குவதற்கும் டிஜிட்டல் மயமாக்குவதற்கும் அரசாங்கத்தின் பாரிய நடவடிக்கைக்கு ஏற்ப அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கட்டண முறை, நாடளாவிய ரீதியிலுள்ள பல முக்கிய அதிவேக வீதிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் செயல்திறனை மேம்படுத்துதல், பண கையாளுதலைக் குறைத்தல் மற்றும் அதிவேக வீதியை பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் ஒருங்குப்படுத்தப்பட்ட சேவையை வழங்கல் ஆகியவற்றை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது என அமைச்சு தெரிவித்துள்ளது.