விளையாட்டு
ஐ.பி.எல் செஞ்சுரி-க்குப் பின் 500 மிஸ்டு கால்… போனை சுவிட்ச் ஆப் செய்த வைபவ் சூர்யவன்ஷி!
ஐ.பி.எல் செஞ்சுரி-க்குப் பின் 500 மிஸ்டு கால்… போனை சுவிட்ச் ஆப் செய்த வைபவ் சூர்யவன்ஷி!
இந்திய மண்ணில் பரபரப்பாக அரங்கேறி வரும் 18-வது ஐ.பி.எல் தொடரில், மிரட்டலான சதம் விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. 14 வயதான இவர் ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த வயதில் அறிமுகம் ஆன வீரர் என்ற சாதனையை படைத்தார். இவர் லக்னோவுக்கு எதிரான 36-வது லீக் ஆட்டத்தில் ஐ.பி.எல். தொடரில் அறிமுகம் ஆன நிலையில், தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் அடித்து கெரியரை அதிரடியாக தொடங்கி இருந்தார் வைபவ் சூர்யவன்ஷி. அதன்பின் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய 35 பந்துகளில் சதமடித்து மிரட்டி இருந்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதமடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்தார். மேலும் ஐ.பி.எல். தொடரில் அதிவேக சதமடித்த இந்திய வீரர், குறைந்த வயதில் ஆட்ட நாயகன் விருது வென்ற வீரர் என ஏராளமான சாதனைகளையும் அவர் படைத்தார்.ஆங்கிலத்தில் படிக்கவும்: Vaibhav Suryavanshi tells Rahul Dravid he had 500 missed calls after IPL century, switched off phone for few daysடெல்லியில் நேற்று செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 33 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்திருந்தார். இந்தப் போட்டிக்குப் பிறகு, சென்னை கேப்டன் தோனியை ராஜஸ்தான் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சந்தித்து வாழ்த்து பரிமாறினார். அப்போது, வைபவ் சூர்யவன்ஷி தோனியின் காலை தொட்டு வணங்கினார். இதனைப் பார்த்து சற்று திகைத்த தோனி, சூர்யவன்ஷிக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.இந்நிலையில், சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்திற்குப் பிறகு, ஐ.பி.எல் அதிகாரப்பூர்வ தளத்திற்காக வைபவ் சூர்யவன்ஷியை இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும்,ராஜஸ்தான் ராயல்ஸின் தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் பேட்டி கண்டார். அப்போது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியிடம், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெறும் 35 பந்துகளில் அபார சதம் அடித்த பிறகு, எத்தனை பேர் அவருக்கு போன் மற்றும் மெஜேஜ் அனுப்பினார்கள் என்று டிராவிட் கேட்டார்.அதற்கு பதிலளித்த வைபவ் சூர்யவன்ஷி, “500க்கும் மேற்பட்ட மிஸ்டு கால்கள் வந்தன. ஆனால் நான் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டேன். என்னிடம் பேச மேலும் நிறைய பேர் என்னை அணுகினர், ஆனால் எனக்கு அது அவ்வளவாகப் பிடிக்கவில்லை. நான் என் தொலைபேசியை 2-4 நாட்கள் சுவிட்ச் ஆப் செய்து விட்டேன். என்னைச் சுற்றி நிறைய பேர் இருப்பது எனக்கு பிடிக்காது. என் குடும்பத்தினரும் ஒரு சில நண்பர்களும் மட்டும் போதும்” என்று அவர் கூறியுள்ளார். வைபவ் சூர்யவன்ஷி நடப்பு தொடரில் 7 போட்டிகளில் ஆடி 252 ரன்களை எடுத்து அசத்தி இருக்கிறார். மேலும் அவர் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் அடித்து இந்த சீசனை நிறைவு செய்துள்ளார். இதேபோல் அடுத்த சீசனிலும் அவர் ஜொலிப்பார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.