இலங்கை
ஓவியத்துறையில் பிரகாசிக்கும் ஈழத்துப் படைப்பாளி ஜேசு யுஜேனியன் ஜோர்ஜ்.
ஓவியத்துறையில் பிரகாசிக்கும் ஈழத்துப் படைப்பாளி ஜேசு யுஜேனியன் ஜோர்ஜ்.
நவீன உலகின் போக்கிற்கேற்ப எம்மவர்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை பல் துறைகளிலும் சாதித்து வெற்றி பெறுவது சாலச் சிறப்பாகும்.
அந்த வகையில், கிளிநொச்சி உதய நகரைச் சேர்ந்த இறப்பியல்பிள்ளை, ஜோர்ஜ் ஜோர்ஜ் குணமணி தம்பதிகளின் புதல்வர் ஜேசு யுஜேனியன் ஜோர்ஜ் அவர்கள் ஓவியத்துறையில் தனக்கான தடத்தினை பதித்துள்ளார்.
இவர் தனது ஆரம்ப கல்வியினை யாழ். நாரந்தனை றோ.க.பாடசாலையிலும் உயர்தரத்தினை கிளி. அக்கராயன் மகா வித்தியாலயத்திலும் பயின்றுள்ளார்.
சிறுவயது முதல் ஓவியத்தில் ஆர்வம் கொண்ட இவர், தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தில் உளவளத்துணை டிப்ளோமா பட்டத்தினையும் பெற்றதோடு, பல்துறை ஆளுமையாகவும் விளங்கும் இவர் ஓவியம், கவிதை, சிறுகதை மற்றும் கேலிச்சித்திரம் போன்றவற்றிலும் தனது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றார்.
அரச சார்பற்ற நிறுவனங்களில் பத்து வருடங்களுக்கு மேல் சமூகப்பணியாற்றியதோடு,
கிளிநொச்சி மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் செயலாளராக மூன்று வருடங்கள் சேவையாற்றியுள்ளார்.
இவ்வாறு பல்துறைகளிலும் தனது திறமைகளை வெளிக்காட்டுவதோடு, சிறந்த ஓவியராகவும் தற்போது தன்னை உருமாற்றிக்கொண்டுள்ளார்.
ஓவியம் வரைதலை ஆரம்பத்தில் பொழுது போக்காக செயற்படுத்தி வந்தவர் தற்போது வர்த்தக ரீதியாக மாற்றம் செய்துள்ளார்.
தொழில் ரீதியாக விளம்பரப்பலகைகள், பதாதைகள் எழுதுதல், ஓவியங்களைப் பார்த்து வரைதல், சிற்பம் சார் வேலைகள், அலங்கார வேலைகள், கணனி மய ஓவியங்கள் வரைதல் போன்றவற்றை முன்னெடுத்து வருகிறார்.
அதுமட்டுமன்றி, புத்தகங்களுக்கான அட்டைப்படங்கள் வரைதல் (ஏழுமலைப்பிள்ளையின் ”தீ”, சிரித்திரன் இதழின் அட்டைப்படங்கள்)
தே.பிரியனின் திண்ணை வீட்டுப் பாடல்கள் மற்றும் பி.டிலக்சனாவின் பட்டுவும் பனங்கிழங்கும், மக்குப்பூனையும் தப்பியோடிய எலி போன்ற கதைப் புத்தகங்களுக்கான ஓவியங்களையும் வரைந்துள்ளார்.
2022-2023 வரை சிரித்திரன் மின் இதழின் ஓவியங்கள் மற்றும் கேலிச்சித்திரங்களையும்
வரைந்துள்ளதோடு, சிறுகதை ஆக்கங்கள் மற்றும் கவிதைகளையும் படைத்து வருகின்றார்.
யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் நூலக நிறுவனத்தில் கிளிநொச்சி மாவட்ட கள ஆய்வாளராகக் கடமையாற்றி பல்வேறு கலைஞர்களையும், நூல்களையும் ஆவணப்படுத்தியுள்ளார்.
பல் துறைகளிலும் நாட்டம் இருந்தாலும், ஓவியத்துறையை தனது பிரதான துறையாக தேர்வு செய்து வர்த்தக ரீதியில் செயற்படுத்திவரும் ஈழத்து ஓவியரை நாமும் வாழ்த்தி நிற்பதோடு, இவரின் வளர்ச்சிக்கு உங்களாலான பங்களிப்புகளையும் வழங்க முடியும் என்பதையும் மகிழ்வோடு தெரிவித்து நிற்கின்றோம்.
தொடர்புகளுக்கு : 0771276713.
லங்கா4 (Lanka4)
அனுசரணை