நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 22/05/2025 | Edited on 22/05/2025

ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் மீண்டும் நெல்சன் – ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வருகிறது. இப்படத்தையும் முதல் பாகத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க அனிருத்தே இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. 

முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தமிழ்நாடு – கேரளா எல்லைக்கு உட்பட்ட ஆனைகட்டி பகுதியில் நடந்தது. பின்பு கோயம்புத்தூரிலும் சில நாட்கள் நடந்தது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் கேரளாவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. அங்கு ரஜினியை காண ரசிகர்கள் திரண்டனர். அவர்களுக்கு வழக்கம் போல் கையசைத்து தனது அன்பை வெளிப்படுத்தியிருந்தார். படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ் சந்தித்து பேசியிருந்தார்.   

Advertisement

இந்த நிலையில் ரஜினி இன்று சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் படம் குறித்து பேசுகையில், “ஜெயிலர் 2 படப்பிடிப்பு நல்லபடியாக நடந்து வருகிறது. எப்போது முடியும் என தெரியவில்லை. டிசம்பர் ஆகிவிடும் என நினைக்கிறேன்” என்றார். பின்பு அவரிடம் கூலி படம் தொடர்பான கேள்விக்கு படம் நன்றாக வந்து கொண்டிருப்பதாக பதிலளித்தார்.