இலங்கை
மக்களைப் பிரித்தாள்வதற்கு பல்வேறு சதி நடவடிக்கைகள்
மக்களைப் பிரித்தாள்வதற்கு பல்வேறு சதி நடவடிக்கைகள்
அமைச்சர் சந்திரசேகர் சுட்டிக்காட்டு
இன ரீதியாக மக்களைத் தூண்டிவிடுவதற்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சில தீயசக்திகள் முயற்சிக்கின்றன. அவற்றுக்கு இடமளிக்கக்கூடாது என்று கனேடியத் தூதுவர் எரிக் வால்ஷிடம் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வால்ஷ், கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரை கடற்றொழில் அமைச்சில் வைத்து நேற்றுச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே, அரசாங்கத்துக்கு எதிராகவும், மக்களைத் தூண்டிவிட்டு நாட்டின் அமைதியைச் சீர்குலைக்கும் விதமாகவும் பல்வேறு தீய நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என்ற விடயத்தை தூதுவரின் கவனத்துக்கு கடற்றொழில் அமைச்சர் கொண்டுசென்றார்.
கடந்த கால அரசாங்கங்கள் தமிழ் மக்களைப் பெரும்பாலும் புறக்கணித்தன. ஆனால், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்தப் பாகுபாடுமின்றி அந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பெருமளவு அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்த உறுதிபூண்டுள்ளது. ஊழல், மோசடி மற்றும் இனவாதம் இல்லாத நாட்டை உருவாக்குவதே பிரதான நோக்கம் என்றும் கனேடியத் தூதுவரிடம் அமைச்சர் சந்திரசேகர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது, இலங்கையில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு கனடா என்றும் துணைநிற்கும் என்று கனேடியத் தூதுவர் உறுதி வழங்கினார். அத்துடன், தமிழ் மக்களால் அநுர அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய மக்களாணையையும் கனேடியத் தூதுவர் எரிக் வால்ஷ் பாராட்டினார்.