நக்கீரன் செய்திப்பிரிவு
Photographer
Published on 22/05/2025 | Edited on 22/05/2025
பாடலாசிரியர் வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுதி முடித்துள்ளதாக நேற்று தனது எக்ஸ் பக்கம் வாயிலாக அறிவித்திருந்தார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, “முப்பாலுக்கும் உரையெழுதி முடித்திருக்கிறேன். ஏழு முறை செப்பனிட்டுவிட்டேன். கணினித் தலைமுறைக்கான கனித்தமிழ் இது. ஈராயிரம் ஆண்டை இருபது வயதுக்கு எடுத்துச் செல்வது. அறமும் பொருளும் ஞானப் பொருளாகவும் இன்பம் கவிதைப் பொருளாகவும் உரை செய்யப்பட்டிருப்பது. பிறந்த பெருங்கடமைகளுள் ஒன்று நிறைவுற்றதாய் நெஞ்சமைதி கொள்கிறேன். திருக்குறளை அடுத்த நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்வோம். வாழ்க வள்ளுவம்; வெல்க குறள்” என்றிருந்தது.
மேலும் அந்த பதிவில் இன்று அதற்கான தலைப்பை அறிவிப்பதாகவும் கூறியிருந்தார். அதன்படி இன்று அதற்கான தலைப்பை அறிவித்துள்ளார். ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக வீடியோ மூலம் தெரிவித்த அவர், “தருமரும், மணக்குடவரும், தாமத்தரும், நச்சரும், பரிதியும், பரிவீலழகரும், திருமலையரும், மல்லரும், பரிப்பெருமாளும், காளிங்கரும், பின்னாளில் வ.உ.சிதம்பரனாரும், தேவநேய பாவாணரும், புலவர் குழந்தையும், மு. வரதராசனாரும், இன்னும் பல சான்றோர்களும், முத்தமிழ் அறிஞர் கலைஞரும், நாவலரும் எழுதி முடித்த பிறகும் கூட, திருக்குறளுக்கு இன்னும் உரை மிச்சப்பட்டிருக்கிறது. அதை நான் எழுதக்கூடிய வாய்ப்பை காலம் எனக்கு வழங்கியிருக்கிறது.
உங்கள் வாழ்த்து பூக்களையே நான் வேண்டி நிற்கிறேன். நீங்கள் என் மீது வீசப்போகும் ஒவ்வொரு பூவும், என் குருதி சிறுக்க வைக்கும். என் உறுதியை உயர்த்தி பிடிக்கும். இன்னும் தமிழுக்கு செய்ய வேண்டும் என்ற வேட்கைக்கு வேகம் கொடுக்கும். வாழ்க திருவள்ளூவர், வளர்க வள்ளுவம்” என பேசி முடித்துள்ளார்.