நக்கீரன் செய்திப்பிரிவு
Photographer
Published on 21/06/2025 | Edited on 21/06/2025
சீகர் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிகாய் அருண் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் டெவிலன். இப்படத்தில் கதாநாயகனாகவும், இணை தயாரிப்பாளராகவும் ந. ராஜ்குமார் நடித்துள்ளார். மேலும் கர்த்திகா, இந்திரா, ஃபிரட்ரிக், பாலாஜி, தோர்தி கிர் மற்றும் சில புதிய முகங்கள் நடித்துள்ளனர். இப்படம் ஒரே ஒரு வீட்டுக்குள் படமாக்கப்பட்ட மன அழுத்தம், பயம், ஏமாற்றம் ஆகிய உணர்வுகளை மையமாகக் கொண்ட மனோதத்துவ திகில் திரைப்படம் ஆகும்.
இந்த படம் 2025ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி மாலை 4:01 மணிக்கு தொடங்கி, மே 31ம் தேதி மாலை 3:58 மணிக்கு திரையிடலுடன் முடிவடைந்தது. எனவே, மொத்தம் 47 மணி நேரம் 58 நிமிடங்களில் திரைக்கதை எழுதல், படப்பிடிப்பு, தொகுப்பு, ஒலி, பின்னணி இசை, கலரிங், சப்டைட்டில், மாஸ்டரிங், திரையிடல் உள்ளிட்ட அனைத்து படைப்பணிகளும் முடிக்கப்பட்டன. இதனுடன், திட்டமிட்ட 48 மணி நேர இலக்கை 3 நிமிடங்கள் முன்னதாகவே முடித்தும் சாதனை படைக்கப்பட்டது.
இந்த சாதனைக்கு நோபிள் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அமைப்பு வழங்கிய சான்றிதழ் எண் IN24103366 எனும் எண்ணுடன் 2025 மே 31ம் தேதி அன்று பதிவானது. இந்த சாதனையை ஹேமலதா தலைமையிலான குழு நேரடியாக கண்காணித்து, ஒவ்வொரு செயல்பாட்டையும் சான்று வழங்கும் முன் சரிபார்த்தது. தமிழ் திரைப்படத் துறையில் ஒரு சாதனையாக, ‘டெவிலன்’ படம் உலக சாதனைப் புத்தகமான நோபிள் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் பெயர் பதிவு செய்துள்ளது, பலரது கவனத்தை பெற்றுள்ளது.