பொழுதுபோக்கு
காட்ஃபாதர் கதையா? வரதராஜ முதலியார் வாழ்க்கையா? உண்மையில் நாயகன் யார்? தயாரிப்பாளர் பதில்!
காட்ஃபாதர் கதையா? வரதராஜ முதலியார் வாழ்க்கையா? உண்மையில் நாயகன் யார்? தயாரிப்பாளர் பதில்!
தமிழ் சினிமாவில், பெரிய அடையாளங்களில் ஒன்றாக இன்றும் போற்றப்படும் ஒரு படம் என்றால் அது கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் வெளியான நாயகன் படம் தான். இந்த படத்தை ஆங்கிலத்தில் வெளியான காட்ஃபாதர் படத்தின் ரீமேக் என்றும், மும்பையை கலக்கிய தமிழரான வரதராஜ முதலியார் வாழ்க்கை வரலாறு என்றும் கூறி வருகின்றனர். உண்மையில் நாயகன் படம் காட்ஃபாதர் கதையா? அல்லது வரதராஜ முதலியார் வாழ்க்கை வரலாறா என்பது குறித்து நாயகன் படத்தை தயாரித்த முக்தா ஸ்ரீனிவாசனின் மகன் முக்தா ரவி கூறியுள்ளார்.1987-ம் ஆண்டு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் வெளியான படம் தான் நாயகன். கமல்ஹாசனுடன் சரண்யா, ஜனகராஜ், டெல்லி கணேஷ், நாசர், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. காலங்கள் பல கடந்தாலும் இன்றுவரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள நாயகன் படம் பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது. சமீபத்தில் 38 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் வெளியான தக் லைப் படம் கூட நாயகன் படத்தை பற்றி தான் அதிகம் பேச வைத்திருக்கிறது.இந்த படம், காட்ஃபாதர் கதையா? அல்லது வரதராஜ முதலியார் வாழ்க்கை வரலாறா என்பது குறித்து நாயகன் படத்தை தயாரித்த முக்தா ஸ்ரீனிவாசனின் மகன் முக்தா ரவி கூறுகையில், எனது சகோதரர் முக்தா சுந்தர், அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்து காட்ஃபாதர் படத்தை தமிழில் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கினார். அப்போது சிவாஜி கணேசன், கமல்ஹாசன், அமலா ஆகியோர் கமிட் செய்யப்பட்டு அமலாவுக்கு அட்வான்ஸ் எல்லாம் கொடுத்து முடிக்கப்பட்டது.இடையில், எங்களை சந்தித்த அனந்து, சிவாஜி கணேசன் நடித்தால் கமல்ஹாசனுக்கு செட் ஆகாது என்று சொன்னார். அதனால் சிவாஜி வேண்டாம் என்று முடிவு செய்தோம். ஆனால் கமல்ஹாசனையும் வயதான தோற்றத்தில் நடிக்க வைக்க முடியாது. அதனால் அடுத்து என்ன செய்வது என்று யோசித்தபோது, மணிரத்னம் இயக்கததில் நடிக்க விருப்பப்பட்ட கமல்ஹாசன் அவரை அழைத்து வந்தபோது அவர் வரதராஜ முதலியார் கதையை சொன்னார். கதையை கேட்ட அப்பா, விபச்சார பகுதியில் இருந்து ஒரு பெண் படிப்பது, ஒரு தந்தை இறப்பை மகள் புறக்கணிப்பது என்று இரு டர்னிங் பாயிண்டை சொல்லி கதையில் சேர்க்க சொன்னார்,அப்படித்தான் சரண்யா கேரக்டர் விபச்சார பகுதியில் இருந்து வருவது போலவும், இறுதியில் கமல்ஹாசன் மகள் அவரை பிரிந்து சென்றுவிடுவது போலவும் காட்சி அமைக்கப்பட்டது. இதில் சரண்யா கேரக்டர் கொஞ்சம் தான் இருக்கிறது என்று அமலா, ரேவதி, ஜீவிதா ஆகிய பல நடிகைகள் மறுத்துவிட்டனர். அதன்பிறகு தான் சரண்யா அந்த கேரக்டரில் நடித்தார். வரதராஜ முதலியார் கதை என்றாலும், கமல்ஹாசன். காட்ஃபாதர் படத்தில் வரும் டான் கேரக்டராகவே தன்னை நினைத்துக்கொண்டார். அதனால் தான் படத்தில் அவருக்கு டூயட் இல்லை.எங்க அப்பா முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் தயாராக இருந்த காட்ஃபாதர் திரைப்படம் மணிரத்னம் இயக்கத்தில் வரதராஜ முதலியாரின் வாழ்க்கை கதையாக வெளியில் வந்தது என்று முக்தா ரவி கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.