உலகம்
இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து
இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து
இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு அருகே 65 பேரை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் 38 பேர் காணாமல் போயுள்ளதோடு, 23 பேர் உயிர் பிழைத்துள்ளதாக இந்தோனேசியா நாட்டின் தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.
கிழக்கு ஜாவா மாகாணத்தின் பன்யுவாங்கி துறைமுகத்திலிருந்து கே.எம்.பி. துனு பிரதாமா ஜெயா என்கின்ற இந்த படகு நேற்றிரவு பாலிக்கு புறப்பட்டு அரை மணிநேரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பலத்த நீரோட்டங்கள் மற்றும் காற்றினால் மீட்புப் பணி தடைபட்டிருந்தால், காணாமல் போன 38 பேரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
17,000 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட தீவுக்கூட்டமான இந்தோனேசியாவில் படகு சேவை பொது போக்குவரத்தாக காணப்படுகிறது.
படகுகளில் போதுமான உயிர்காக்கும் உபகரணங்கள் இன்மை, அதிக சுமைகளை ஏற்றுதல் ஆகியவற்றால் விபத்துக்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன.
இதேவேளை, கடந்த 2023 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின் சுலவேசி தீவுக்கு அருகே சிறிய படகு ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.