இலங்கை
யாழ். செம்மணி மனித புதைகுழியின் கொடூர பக்கங்கள்; வெளியாகிய பின்புலங்கள்
யாழ். செம்மணி மனித புதைகுழியின் கொடூர பக்கங்கள்; வெளியாகிய பின்புலங்கள்
செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த அவலத்தின் ஆரம்பக் கொடூரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
செம்மணி – சித்துப்பாத்தி அவலத்தின் பின்புலங்களை, கிரிஷாந்தி குமாரசுவாமியின் கொலை வழக்கின் அரச சட்டவாதியான பிரசாந்தி மஹிந்தரத்ன, ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
செம்மணிப் புதைகுழியில் நடைபெற்று வரும் அகழ்வுகள், போரின் போது நடந்த கொடூரமான பக்கங்களை வெளிப்படுத்துகின்றன.
ஆனால், கிரிஷாந்தி கொலை வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரின் வாக்குமூலம் இல்லாவிட்டால், இந்தப் புதைகுழி இலங்கை மண்ணின் கீழ் புதைக்கப்பட்ட ஒரு இரகசியமாகவே இருந்திருக்கும் என்று அரச சட்டவாதியான பிரசாந்தி மஹிந்தரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
கிரிஷாந்தி குமாரசுவாமியின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சோமரத்ன ராஜபக்சவுக்கு 1998 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்னர், அவரே செம்மணிப் புதைகுழியை பற்றி தகவல்களை வெளிப்படுத்தினார்.
இந்தநிலையில், அவர் உட்பட குறித்த வழக்கின் குற்றவாளிகள், தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையில் இருந்து நிவாரணம் கோரி அண்மையில் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
அரச சட்டவாதி பிரசாந்தி மஹிந்தரத்னவின் கூற்றுப்படி, 1996ஆம் ஆண்டு கிரிஷாந்தி குமாரசுவாமி, அவரது தாய் மற்றும் சகோதரர் உள்ளிட்ட நான்கு பேர் காணாமல் ஆக்கப்பட்டு, கொல்லப்பட்டனர்.
அந்த சந்தர்ப்பத்தில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 18 வயதான கிரிஷாந்தி குமாரசுவாமி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார்.
பின்னர், அவரை காணவில்லை என்று தேடிச்சென்ற அவரின் தாய் உள்ளிட்ட மூவரும் கொல்லப்பட்டனர்.
எனினும் குறித்த நால்வரும் காணாமல் போனமை மற்றும் கொலை செய்யப்பட்டமை தொடர்பான தகவல்கள் கொழும்புக்கு கிடைக்கவில்லை.
இந்தநிலையில், சட்டத்தரணி ஒருவரால், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதன் பின்னரே, அப்போதைய சட்டமா அதிபர், இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இந்த பின்னணியில், இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த ஒரு பகுதியில் அவர்கள் காணாமல் போனமையால், பாதிக்கப்பட்டவர்களுக்கு, பொறுப்புக்கூறலை உறுதி செய்ய தாம் விரும்பியதாக அரச சட்டவாதி பிரசாந்தி மஹிந்தரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டமா அதிபரின் பணிப்புக்கு அமைய, யாழ்ப்பாணத்துக்குச் சென்ற தாம், நீதவான் நீதிமன்றுக்குச் சென்று, இராணுவ காவல்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும்; பிரசாந்தி மஹிந்தரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும், ஆரம்ப விசாரணைகளின் போது அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டதாக தகவல் மாத்திரமே தம்மிடம் இருந்ததாகவும், அதனை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்கள் எவையும் இருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், கிரிஷாந்தி குமாரசுவாமி, கௌதமி என்ற தமது நண்பி ஒருவருடன், அவர் கொல்லப்பட்ட நாளில், சில மணிநேரம் பயணித்தமையும் செம்மணி சோதனைசாவடியில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டமையும் தெரியவந்தது.
அத்துடன், அவரை தேடிச் சென்ற அவரது தாய் உள்ளிட்ட மூவரும் தடுத்து வைக்கப்பட்டமையும் தெரியவந்தது.
முன்னதாக, கிரிஷாந்தியை தேடிச்சென்ற அவரது தாயிடம், இந்த வழக்கின் முதலாவது குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ஷ, கிரிசாந்தி குறித்து தமக்கு தெரியாது என பதிலளித்துள்ளார்.
தொடர்ச்சியாக, கிரிஷாந்தி குறித்த கேள்வி எழுப்பப்பட்டமையால் பீதியடைந்த இராணுவத்தினர் அவர்கள் மூவரையும் தடுத்து வைத்தனர்.
இதன்போது, கிரிஷாந்தி குமாரசுவாமி இரவு வரை படைத்தரப்பினரால், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டமையும், அவரது தாய், சகோதரர் உள்ளிட்டவர்கள் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டமை தெரியவந்தது.
இதற்கிடையில், கிரிஷாந்தி குமாரசுவாமியின் தாய் படையினரால் கொல்லப்படுவதற்கு முன்னர், தமது தாலியை கழற்றி, அதனை தமது உறவினர்களிடம் கையளிக்குமாறு பிரதான குற்றவாளியான சோமரட்ன ராஜபக்சவிடம் ஒப்படைத்துள்ளார்.
எனினும், ராஜபக்ச, கிரிஷாந்தியின் தாயார் கோரியதற்கு மாறாக, அந்த தாலியை, தமது சகோதரியிடம் கையளித்துள்ளார்.
அந்த தாலி பின்னர் இடம்பெற்ற விசாரணைகளின் போது சோமரட்ன ராஜபக்ஷவின் சகோதரியிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சுமார் 45 நாட்களின் பின்னரே அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.
எனினும் சடலங்கள் அழுகிய நிலையில் இருந்தமையால், குறித்த நால்வரின் ஆடைகளில் இருந்த சலவை தொழிலாளர்கள் இடும் முத்திரைகளைக் கொண்டு, அவை அடையாளம் காணப்பட்டன.
இதற்காக, குறித்த நால்வரின் ஆடைகளை சலவைச் செய்யும் தொழிலாளி, வரழைக்கப்பட்டிருந்தார்.
குறித்த காலத்தில், உடற்கூற்று பரிசோதனைக்கான வசதிகளும் காணப்படவில்லை.
எனவே, இந்த ஆதாரங்களை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது.
அவர்களின் சடலங்கள் அழுகியிருந்தமையால் தடயவியல் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை.
எனவே, செம்மணி சோதனைச் சாவடியில் பணியாற்றிய இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களிடம் இருந்து, தகவல்கள் பெறப்பட்டு சட்டநடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக அரச சட்டவாதியான பிரசாந்தி மஹிந்தரத்ன குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களும், கொல்லப்பட்ட கிரிஷாந்தி உட்பட்டவர்களின் சடலங்களை அகற்றுவதற்கு உதவியிருந்தமை தெரியவந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனடிப்படையிலேயே, குற்றம் புரிந்த இராணுவத்தினருக்கு எதிராக பாலியல் வன்கொடுமை வழக்கு தொடரப்பட்டது என்று கிரிஷாந்தி குமாரசுவாமி கொல்லப்பட்ட வழக்கின் அரச சட்டவாதியான பிரசாந்தி மஹிந்தரத்ன குறித்த ஆங்கில ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.