இலங்கை
அருளம்பலம் சுவாமிகளின் குருபூஜை தினமும் நூல் வெளியீடும்!
அருளம்பலம் சுவாமிகளின் குருபூஜை தினமும் நூல் வெளியீடும்!
ஈழத்து சித்தர் கீரிமலையில் சமாதி கொண்டு உறையும் அருளம்பல சுவாமிகளின் 100ஆவது குருபூசை தினம் ஆனி அத்தம் நேற்று வியாழக்கிழமை(03) சிறப்பாக அனுட்டிக்கப்பட்டது.
இதன்போது, அருளம்பலம் சுவாமிகளின் சமாதியில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று மதியம் அன்னதானமும் அதனைத்தொடர்ந்து அருளம்பலம் சுவாமிகளின் நூல் வெளியீடும், சுவாமிகளின் நினைவு போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்ளிற்கான பரிசில் வழங்கல் நிகழ்வும் 100ஆவது ஆண்டை குறிக்கும் 100மரக்கன்றுகள் சித்தர் பீடத்தில் நடுகை என்பன இடம்பெற்றன .
நூலின் முதற் பிரதியை சிவகுரு ஆதீனத்தின் குரு முதல்வர் வேலன் சுவாமிகள் வெளியிட பிரதம விருந்தினராக கலந்து கொண்ட பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா பெற்றுகொண்டார்.
குறித்த நிகழ்வில், அகில இலங்கை சைவ மகாசபையினர் , தமிழ் சைவ பேரவையினர் , பேராசிரியர்கள், அருளம்பலம் சுவாமிகளின் வழித்தோன்றல்கள், அறநெறிபாடசாலை மாணவர்கள், யாழ். தாதியக்கல்லூரி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.