இந்தியா
இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் செய்தி எதிரொலி: மளிகை கடை வியாபாரியை தற்கொலை தூண்டிய பைனான்சியர் கைது
இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் செய்தி எதிரொலி: மளிகை கடை வியாபாரியை தற்கொலை தூண்டிய பைனான்சியர் கைது
புதுச்சேரி திருக்கனுார் அடுத்த சோரப்பட்டு, தென்னஞ்சாலை வீதியை சேர்ந்தவர் பெரியண்ணசாமி (59) மளிகை கடை நடத்தி வந்த இவருக்கு, கவுரி என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், பெரியண்ணசாமி கடந்த மார்ச் 15 ஆம் தேதி வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி கவுரி திருக்கனுார் போலீசில், புகார் அளித்தார்.அதன் பேரில், போலீசார், சந்தேக மரணம் 194 பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். கடந்த ஏப்ரல் 17 ம் தேதி அவரது மளிகை கடையை திறந்து பார்த்தபோது, அங்கு கடிதம் ஒன்று இருந்தது. அதில், தனியார் நிதி நிறுவனத்தில் பெற்ற கடனுக்காக, தன்னை அவமானப்படுத்தியதால், தற்கொலை செய்து கொள்ளுவதாக எழுதி உள்ளதாக, அவரது மனைவி கவுரி மீண்டும் திருக்கனுார் போலீசில் புகார் அளித்தார்.இதையடுத்து, அந்த கடிதத்தின் உண்மை தன்மை குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், கடிதம் பெரியண்ணசாமி எழுதியது தான் என்பது சமீபத்தில் உறுதியது. இதையடுத்து, நிதி நிறுவன மேலாளர் ஜெயச்சந்திரன், கலெக்சன் ஏஜென்ட் சக்திவேல் முருகன் ஆகியோர் மீது தற்கொலைக்கு துண்டியதாக வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இது தொடர்பான செய்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்தில் வெளியாகியது. அதில், மளிகை கடை வியாபாரி பெரியண்ணசாமியை தற்கொலைக்கு தூண்டியதாக புதுச்சேரி தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் மேனேஜர் மற்றும் கலெக்சன் ஏஜென்ட் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரியும், கைது செய்யவில்லை என்றால், தமிழர் வாழ்வுரிமைக் கட்சியினர் புதுச்சேரி டி.ஜி.பி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டது இந்த நிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் செய்தி எதிரொலியாக கலெக்சன் ஏஜென்ட் சக்திவேல் முருகனை திருக்கனூர் போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து சீனியர் சூப்பர்டா ஆஃப் போலீஸ் கலைவாணன் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி, சோரப்பட்டை சேர்ந்த பெரியண்ணசாமி (வயது 59) என்பவர் கடந்த மார்ச் 15 ஆம் தேதி அவர் தங்கியிருந்த வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மரணமடைந்த நிலையில், இவ்வழக்கில் கடன் தொந்தரவை உறுதிப்படுத்தும் தற்கொலைக் கடிதம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, திருக்கனூர் காவல்நிலையம் தீவிர விசாரணைக்கு பின்னர் வசூல் முகவரைக் கைது செய்துள்ளது.ஆரம்பத்தில், வழக்கு எண் 35/2025, பிரிவு 194ன் கீழ் (BNSS) இயற்கைக்கு மாறான மரணம் எனப் பதிவாகியிருந்தது. பின்னர், 09.04.2025 அன்று, குடும்பக் கடையை சுத்தம் செய்யும் போது, மறைந்தவரின் முதல்மகன் சுகுமார் ஒரு தற்கொலைக் குறிப்பைப்(கடிதம்) கண்டுபிடித்தார். சாட்சிகளின் முன்னிலையில் கடிதம் பறிமுதல் செய்யப்பட்டு, எழுத்து உண்மைதனையை உறுதி செய்ய, குற்றவியல் விஞ்ஞான ஆய்வகத்திற்கு (FSL), கிருமாம்பாக்கம் அனுப்பப்பட்டது.சமீபத்தில் கிடைத்த குற்றவியல் விஞ்ஞானஆய்வகத்தின் அறிக்கையின்படி, கடிதம் எழுதியவர் மறைந்த பெரியண்ணசாமிதான் என்பதும் உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வழக்கு பி.என்.எஸ் (பாரதிய நியாய சன்ஹிதா – Bharatiya Nyaya Sanhita) பிரிவு 108 மற்றும் 3(5), தற்கொலைக்கு தூண்டுதல் குறித்த பிரிவுகளின் கீழ் மறுபதிவு செய்யப்பட்டது.விசாரணையின் அடிப்படையில், இன்று திருக்கனூர் போலீசார் முதலியார்பேட்டையைச் சேர்ந்த சக்திவேல் முருகன் என்பவரை கைது செய்துள்ளனர். இவர் பாலாஜி நகர், புதுச்சேரியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்துடன் வசூல் முகவராக இணைந்துள்ளார். கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.புதுச்சேரி காவல்துறை நீதியை உறுதிப்படுத்தும் தமது அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தும் விதமாக, கடனளிக்கிற நபர்கள் அல்லது வசூல் முகவர்களால் ஏற்படக்கூடிய ஒடுக்குமுறை அல்லது தொந்தரவு காரணமாக ஏற்படும் துயர சம்பவங்கள் குறித்து, உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் குறிப்பாகத் தெரிவித்துள்ளது. பொதுமக்கள், வசூல் முகவர்களால் ஏற்படும் எந்தவொரு கொடுமையையும் அருகிலுள்ள காவல் நிலையத்தில் உடனடியாகத் தகவலளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி.