இலங்கை
சிவனுக்கு அபிஷேகம் செய்யும் போது இந்த விஷயங்களை மறந்தும் செய்துடாதீங்க
சிவனுக்கு அபிஷேகம் செய்யும் போது இந்த விஷயங்களை மறந்தும் செய்துடாதீங்க
சாவன் மாதத்தில் எந்த நாளில், எந்த முறையில் சிவனை வழிபட்டாலும் அதற்கு பலன் கிடைக்கும் என்றாலும் இந்த மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் சிவனை சில குறிப்பிட்ட முறைகளில், அதற்கான விதிமுறைகளை தெரிந்து கொண்டு வழிபட்டால் அளவில்லாத நன்மைகளை பெற முடியும்.
சாவன் மாதம் என்பது இந்து நாட்காட்டியில் ஐந்தாவது மாதமாக வருகிறது. ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் வரும் இந்த சாவன் மாதம் சிவ வழிபாட்டிற்குரிய மாதமாக கருதப்படுகிறது.
வட இந்தியாவில் இது மிகவும் புனிதமான மாதமாக கருதப்படுவதால் இந்த மாதத்தில் பெரும்பாலானவர்கள் விரதம் இருந்து சிவனை வழிபடுவது உண்டு.
பெண்கள், சவான் மாதத்தில் பச்சை நிற உடைகள், அணிகலன்கள் போன்ற பொருட்களை பயன்படுத்துவது உண்டு. இது வளமான வாழ்க்கையை தரும் என்றும், மங்களகரமானது என்றும் கருதப்படுகிறது. திருமணம், மகிழ்ச்சி, குழந்தைப்பேறு ஆகியவற்றிற்காக இந்த மாதத்தில் சிவ பெருமானை பக்தர்கள் வழிபடுகிறார்கள்.
சாவன் மாதத்தில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, சிவ பூஜை செய்வது மிக முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. அதிலும் இந்த மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் இந்த வழிபாட்டை செய்வது மிகவும் சிறப்பானதாகும்.
இது மிகவும் மங்களகரமான மாதமாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டு, சாவன் மாதம் ஜூலை 11 ஆம் திகதி தொடங்கி, ஆகஸ்ட் 9 ஆம் திகதி முடிவடைகிறது. இது ஸ்ராவண மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த மாதத்தில் சிவபெருமானை வழிபடுவதற்கு புராணங்களில் கதை ஒன்றும் சொல்லப்படுகிறது. பாற்கடலைக் கடைந்தபோது (சமுத்திர மந்தன்) கடலில் இருந்து வெளிப்பட்ட ஆலகால விஷத்தை (நஞ்சு) சிவபெருமான் இந்த மாதத்தில் தான் குடித்தார் என்று நம்பப்படுகிறது.
அந்த நஞ்சின் தாக்கத்தைக் குறைப்பதற்காக, பக்தர்கள் நீர், பால் மற்றும் வில்வ இலைகளை சிவலிங்கத்திற்குச் சமர்ப்பித்து, ஆரோக்கியம், செழிப்பு மற்றும் அமைதிக்காகப் பிரார்த்தனை செய்கிறார்கள்.
விரதம் இருப்பது, கங்கையில் நீராடுவது, ‘ஓம் நம சிவாய’ மந்திரத்தை உச்சரிப்பது என சிவ பெருமானை நினைத்து எது செய்தாலும் அது நிச்சயம் பலன் தரும். வீட்டில் சிவ லிங்கம் வைத்திருப்பவர்கள் தினமும் அதற்கு சிறிதளவு சுத்தமான நீரால் அபிஷேகம் செய்து வந்தாலும் சிவ பெருமானின் பரிபூரமான அருள் கிடைக்கும்.
ஆனால் சிவனுக்கு அபிஷேகம் செய்யும் போதும், சிவனை வழிபடும் போதும் சில முக்கியமான விஷயங்களை கண்டிப்பாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். சிவ வழிபாட்டின் போது எவற்றை எல்லாம் மறந்தும் செய்து விடக் கூடாது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
சிவலிங்கத்திற்கு நீர் ஊற்றி அபிஷேகம் செய்யும் போது தெற்கு அல்லது கிழக்கு திசையை நோக்கி நிற்கக் கூடாது என்று கூறப்படுகிறது. அதற்குப் பதிலாக, வடக்கு திசையை நோக்கி நிற்க வேண்டும். இதுவே சிவபெருமானுக்குரிய திசையாக கருதப்படுகிறது.
நீர் ஊற்றும் போது சிறிது நேரம் இடையில் நிறுத்துவது போன்ற தவறுகளை செய்யக் கூடாது. தொடர்ச்சியாக, அதே சமயம் மெதுவாக சிவனின் திருமேனியும், மனமும் குளிரும் வகையில் நீரை ஊற்ற வேண்டும்.