இந்தியா

சொகுசு கப்பல் வருகைக்கு எதிர்ப்பு; புதுச்சேரி அ.தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டம்

Published

on

சொகுசு கப்பல் வருகைக்கு எதிர்ப்பு; புதுச்சேரி அ.தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி மாநிலத்திற்கு வருகை தரும் சூதாட்ட சுற்றுலா சொகுசு கப்பலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது;சுற்றுலா என்கின்ற பெயரில் புதுச்சேரி நகரப்பகுதி முழுவதும் கலாச்சார சீரழிவில் சிக்கி தவிக்கிறது. தங்கு தடையின்றி போதை பொருள் விற்பனை கேந்திரமாக புதுச்சேரி மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த தி.மு.க, காங்கிரஸ் ஆட்சியினரால் கொண்டுவர முயற்சிக்கப்பட்ட கார்டிலா என்ற வெளிமாநில நிறுவனத்திற்கு சொந்தமான இந்த சூதாட்ட சொகுசு கப்பலை மீண்டும் ஆளும் அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய துணைநிலை ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தர்ராஜனால் அனுமதி மறுக்கப்பட்ட இந்த சொகுசு கப்பலுக்கு தற்போதைய துணைநிலை ஆளுநர் அனுமதி அளித்துள்ளது வியப்பாக உள்ளது. சொகுசு கப்பலின் வருகையை முன்னிட்டு கடற்கரை முகத்துவார பகுதியில் மீன்பிடி படகுகள் சுற்றுலா படகுகள், பாய்மர படகுகள் இவற்றிற்கு இன்று தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலை நீடித்தால் ஒட்டுமொத்தமாக மீன்பிடி தொழில் மற்றும் சுற்றுலா படகு தொழில் புரியும் மீனவர்கள் பாதிக்கப்படுவர். சுற்றுலா படகு விடுவதற்கு அனுமதி கேட்டுள்ள மீனவர்களுக்கு 10 மாதம் ஆகியும் இன்றுவரை அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. கடற்கரை காவல்துறை, சுற்றுபுற சூழல் துறை, துறைமுக துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் தடையில்லா சான்றிதழ் கேட்டு அனுமதி வழங்குவதில் திட்டமிட்டு காலதாமதம் செய்கின்றனர். இன்று இந்த சூதாட்ட சொகுசு கப்பலுக்கு ஒரே வாரத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சொகுசு கப்பல் பயணத்திற்கு அ.தி.மு.க எதிர்ப்பு தெரிவிக்கிறது. காவல்துறை, வருவாய் துறை, துறைமு துறை, சுற்றுலாதுறை உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் தங்களது அன்றாட அரசு பணியை தவிர்த்து இந்த சுற்றுலா சொகுசு கப்பலுக்கு பணி செய்துள்ளனர். பிரிட்டிஷ் காலத்தில் கூட நடைமுறைப்படுத்தப்படாத அடக்குமுறை இன்று காவல்துறையை வைத்து அரசு எங்களது போராட்டத்தை அடக்க முயற்சி செய்தது. யாரோ ஒரு வெளிமாநில கார்ப்பரேட் நிறுவனத்திற்காக ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் அடிமை சேவையை இன்று செய்தது கேவலமான ஒன்றாகும். இந்த கப்பலில் இருந்து இறங்கிய நூற்றுகணக்கான பயணிகளுக்காக பிரதான சாலையான அம்பேத்கர் சாலையில் போக்குவரத்து முழுமையாக இழுத்து மூடப்பட்டது. 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் கடமை உணர்ச்சியோடு தங்களது கடமையை செய்தது பரிதாபமாக இருந்தது. ஆட்சியில் உள்ள யாராக இருந்தாலும் நம் மண்ணின் மைந்தர்களாக மீன்பிடி தொழில், சுற்றுலா படகு தொழில் புரியும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து வெளிமாநிலத்தை சேர்ந்த ஒரு கார்ப்பரேட் நிறுவனம் பயன்பெற கூடிய வகையில் செயல்படமாட்டார்கள். இன்று இந்த கப்பல் வருகைக்கு அ.தி.மு.க எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். அரசு இந்த சுற்றுலா கப்பல் வருகையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தொடர்ந்து இந்த சூதாட்ட பயண சொகுசு கப்பலுக்கு அரசு அனுமதி அளித்தால் எங்களது பொதுச்செயலாளர் எடப்பாடியார் அனுமதி பெற்று ஒட்டுமொத்த மீனவ சமுதாய மக்களுக்காக அ.தி.மு.க மாநில தழுவிய அளவில் போராட்டத்தை முன்னெடுத்து செல்லும். இவ்வாறு அன்பழகன் கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version