விளையாட்டு
மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் சாய்த்த குகேஷ்: ‘மேக்னஸின் ஆதிக்கம் பற்றி இப்போது கேள்வி எழுப்பலாம்’ – கேரி காஸ்பரோவ்
மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் சாய்த்த குகேஷ்: ‘மேக்னஸின் ஆதிக்கம் பற்றி இப்போது கேள்வி எழுப்பலாம்’ – கேரி காஸ்பரோவ்
குரோஷியாவில் உள்ள ஜாக்ரெப் நகரில் நடைபெற்று வரும் சூப்பர் யுனைடெட் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் குரோஷியா 2025 செஸ் போட்டியில் உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா, குகேஷ் ஆகியோர் களமாடியுள்ளனர். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் இந்நிலையில், இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடி வரும் குகேஷ், நான்காவது சுற்றில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெர்க்கையும், ஐந்தாவது சுற்றில் அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் ஃபேபியானோ கருவானைவை வீழ்த்தி அசத்தி இருந்தார். இந்த நிலையில், குகேஷ் தனது 6-வது சுற்றில் உலகின் 1 நம்பர் வீரரும், ரேபிட் செஸ் போட்டியில் ஆதிக்கம் செலுத்துபவருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார்.மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்தப் போட்டியில், கருப்புக் காய்களுடன் குகேஷ் ஆடியது சற்று பின்னடைவாக பார்க்கப்பட்டது. ஆனாலும், தனது அசாத்திய திறனால் குகேஷ் மேக்னஸ் கார்ல்சனை சாய்த்தார். தனது 49-வது நகர்வில் குகேஷிடம் சிக்கிக் கொண்ட கார்ல்சன் பெரும் ஏமாற்றத்துடன் போட்டி நடந்த இடத்தை விட்டு வெளியேறினார். கிளாசிக்கல் செஸ் போட்டியுடன் ஒப்பிடும்போது குகேஷ் போராடுவதாகக் கூறப்படும் ரேபிட் செஸ் போட்டியில் மீண்டும் ஒருமுறை கார்ல்சனை வீழ்த்தி இருக்கிறார். சமீபத்தில் நார்வேயில் நடந்த போட்டியில் கார்ல்சனை குகேஷ் வீழ்த்தியிருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது. இந்த அபார வெற்றியின் மூலம் குகேஷ் 10 புள்ளிகளுடன் தற்போது முதலிடத்தில் உள்ளார் குகேஷ். மேலும், நெருங்கிய போட்டியாளரான ஜான்-க்ர்ஸிஸ்டோஃப் டுடாவை விட குகேஷ் இரண்டு புள்ளிகள் முன்னிலையில் உள்ளார். அதே நேரத்தில் கார்ல்சன் 6 புள்ளிகளுடன் பின்தங்கியுள்ளார். அவருக்கு இன்னும் மூன்று ஆட்டங்கள் மீதமுள்ளன. இதனிடையே, இந்தப் போட்டியை வர்ணனை செய்த 13 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற கேரி காஸ்பரோவ், “இப்போது நாம் மேக்னஸின் ஆதிக்கத்தை கேள்விக்குள்ளாக்க முடியும். இது குகேஷிடம் அவர் இழந்த இரண்டாவது தோல்வி மட்டுமல்ல, இது ஒரு உறுதியான தோல்வி. இம்முறை குகேஷ் வென்றது அதிர்ஷ்டம் அல்ல. அல்லது மேக்னஸின் மோசமான தவறுகளிலிருந்து குகேஷ் தொடர்ந்து பயனடைந்து வந்தார் என்றும் சொல்ல முடையது. இது ஒரு பெரிய சண்டையாக இருந்த ஒரு ஆட்டம். அதில் மேக்னஸ் தோற்றுள்ளார்.” என்று அவர் கூறியிருக்கிறார்.