இலங்கை
வவுனியாவில் 25,000 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை; திலகநாதன் எம்.பி.தெரிவிப்பு
வவுனியாவில் 25,000 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை; திலகநாதன் எம்.பி.தெரிவிப்பு
வவுனியாவில் ‘கூகுள்’ வரைபடம் மூலம் வனவளத் திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட 25 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளை முன்னெடுத்துள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
வவுனியா மாவட்டத்தில் வாழ்கின்ற இடம்பெயர்ந்த மக்களுக்கும் காணியற்ற மக்களுக்கும் புதிதாக திருமணம் முடித்து காணிகள் அற்ற குடும்பங்களுக்கும் தீர்வொன்றை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். அந்தவகையில் கடந்த 2012ஆம் ஆண்டில் வவுனியா மாவட் டத்தில் ‘கூகுள்’ வரைபடத்தின் மூலம் வனவளத் திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட அனைத்துக் காணிகளையும் விடுவிப்பதற்குத் தீர்மானித்துள்ளோம்.
குறிப்பாக இந்த மாவட்டத்தில் அண்ணளவாக 25 ஆயிரம் ஏக்கர் காணிகள் அவ்வாறு கையகப்படுத்தப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்திலும் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 52ஆயிரம் ஏக்கர் காணிகள் உள்ளது. அவற்றில் கணிசமானவற்றை தேசியமக்கள் சக்தி அரசாங்கம் விரைவில் விடுவிக்கவுள்ளது. அந்த காணிகளை அதன் உரிமையாளர்களுக்கும் காணிகள் அற்ற மக்களுக்கும் வழங்குவதற்கான துரித நடவடிக்கையை நாம் மேற்கொண்டுள்ளோம்.
அத்துடன் வவுனியாவில் 849 குளங்கள் உள்ளன. அதில் 221 குளங்கள் வனவளத் திணைக்களத்தின் எல்லைக்குள் அமைந்துள்ளன. இவற்றில் தற்போது 44 குளங்களை உடனடியாக விடுவித்து அவற்றை புனர்நிர்மானம் செய்து மக்களிடம் ஒப்படைக்கவுள்ளோம். அத்துடன் காடுமண்டி காணப்படுகின்ற ஏனைய 149 குளங்களை மீட்டு அவற்றை சுத்தப்படுத்தி மக்கள் பாவனைக்கு விடுவிப்பதற்கான நடவடிக்கை விரைவாக முன்னெடுக்கப்படும். இந்த வருடத்துக்குள் அந்தப் பணிகள் ஆரம்பிக்கப்படும்.
வவுனியா மாவட்டத்தில் ஆறு பெரிய நீர்ப்பாசனக் குளங்கள் உள்ளன. அவற்றை புனரமைப்பதற்காக 780 மில்லியன் ரூபா தேவையாகவுள்ளது. அந்த நிதியை அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில் ஒதுக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக உலக வங்கி ஒரு பில்லியன் டொலர் நிதியை வழங்கவுள்ளது. இதன் மூலம் வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் பொருளாதாரத்தை வளம்பெறச்செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவோம் – என்றார்.