இலங்கை
விலைச்சூத்திரத்துக்கு ஏற்பவே விலைகளின் ஏற்ற, இறக்கங்கள்; அமைச்சரவைப் பேச்சாளர் விளக்கம்!
விலைச்சூத்திரத்துக்கு ஏற்பவே விலைகளின் ஏற்ற, இறக்கங்கள்; அமைச்சரவைப் பேச்சாளர் விளக்கம்!
விலைச் சூத்திரத்தை அடிப்படையாகக்கொண்டு விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன. விலைகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும் போது அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
ஒவ்வொரு மாத இறுதியிலும் அடுத்த மாதத்துக்கான எரிபொருள் விலை சூத்திரத்துக்கமையக் கணிப்பிடப்படும். ஜூலை மாத எரிபொருள் விலைக்காக ஜூன் 30ஆம் திகதி கணிப்பீடு இடம்பெற்றது. ஜூன் மாதத்தில் காணப்படும் எரிபொருள் விலையை அடிப்படையாகக் கொண்டே ஜூலை மாதத்துக்கான விலையும் தீர்மானிக்கப்படும். மாறாக ஏப்ரல் அல்லது மே மாதத்தில் கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள் விலையை அடிப்படையாகக்கொண்டு ஜூலை மாதத்துக்கான விலை தீர்மானிக்கப்படுவதில்லை. ஜூன் மாதம் சராசரி விலை அதிகரித்தமையால் ஜூலை மாதத்திலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் சராசரி விலை குறையும் பட்சத்தில், ஓகஸ்ட் மாதம் விலை குறைவடையும். கடந்த காலங்களில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் ஊழல், மோசடிகள் இடம்பெற்றிருக்காவிட்டால் தற்போது மக்களுக்கு எரிபொருள் விலைகளில் நிவாரணங்கள் வழங்கியிருக்கமுடியும் – என்றார்.