பொழுதுபோக்கு
அஜித்குமார் மரணம், ரிதன்யா வரதட்சனை வழக்கு; எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பு: சசிகுமார் ஓபன் டாக்!
அஜித்குமார் மரணம், ரிதன்யா வரதட்சனை வழக்கு; எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பு: சசிகுமார் ஓபன் டாக்!
தமிழ் சினிமாவில், தற்போது கதையின் நாயகனாக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நடிகரும் இயக்குனருமான சசிகுமார் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ஃப்ரீடம். இந்த படத்தின் ப்ரேமோஷன் நிகழ்ச்சிக்காக நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் சசிகுமார், சமீபத்தில் அஜித்குமார் மரணம், ரிதன்யா வரதட்சனை கொடுமை குறித்து பேசியுள்ளார்.சுப்பிரமணியபுரம் என்ற மெகாஹிட் படத்தை கொடுத்த சசிகுமார், அடுத்து மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க தொடங்கினார். அப்படி வெளியான நாடோடிகள், குட்டிப்புலி, உள்ளிட்ட பல படங்கள் வெற்றிகளை கொடுத்தாலும், இடையில் சறுக்களை சந்தித்த சசிகுமாருக்கு ஒரு இடைவெளிக்கு பிறகு பெரிய வெற்றியை கொடுத்த படம் அயோத்தி. இந்த படத்திற்கு பிறகு, சசிகுமார் நடித்து வரும் அடுத்தடுத்த படங்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.அந்த வகையில் நந்தன், டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய படங்களின் வெற்றியை தொடந்து சசிகுமார் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ஃப்ரீடம். சத்யசிவா இயக்கியுள்ள இந்த படம் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த தமிழ் மக்கள் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது டிரெய்லரில் தெரியவந்துள்ளது. இந்த படம் வரும் ஜூலை 10-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன் பணிகளில் சசிகுமார் பிஸியாக ஈடுபட்டு வருகிறது.அந்த வகையில் தற்போது இயக்குனர் சத்யசிவா – சசிகுமார் இருவரும் பங்கேற்ற ஒரு நேர்காணலில், சமீபத்தில் போலீஸ் விசாரணையில் மரணமடைந்த அஜித்குமார், வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட ரிதன்யா குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதில், போலீஸ் விசாரணை என்பது நமது ஊரில் தான் இப்படி இருக்கிறது. ஆனால் இப்படி விசாரிக்க கூடாது. அடித்து துன்புறுத்தி விசாரணை நடத்துவது கூடாது என்று நான் நினைக்கிறேன்.அடித்து துன்புறுத்துவது தவறு அதை செய்ய கூடாது என்பதை தான் இந்த படத்திலும் வலியுறுத்தி இருக்கிறோம். போலீஸ் எப்படி நடந்துகொள்கிறார்கள், எப்படி துன்புறுத்துகிறார்கள் என்பதை சொல்லி இருக்கிறோம். அதில் சில போலீஸ்காரர்கள் நல்லவர்களாக இருப்பார்கள். அதேபோல் ரிதன்யா வழக்கில், வரதட்சனை கேட்பதே தவறு தான். பல வருடங்களாக நாம் சொல்லிக்கொண்டிருப்பது வரதட்சனை கூடாது என்பதை தான். அந்த வரதட்சனைக்கு உயிர் பலியாகியுள்ளது என்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.வரதட்சனை கேட்டு கொடுமைபடுத்துவது என்பது பெரிய குற்றம். இது ஒரு தப்பான விஷயம். பணம் ஒரு உயிர் என்று வரும்போது, உயிர் விலைமதிக்க முடியாத ஒரு விஷயம். இதை பற்றி அனைவருக்கும் புரியும் வகையில் அந்த எண்ணத்தையே உடைக்கும் வகையில் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.