வணிகம்
‘7.45% வட்டியில் ஹோம் லோன்; பிராஸசிங் ஃபீஸ் கிடையாது’… ஆச்சரிய சலுகை அறிவித்த பொதுத்துறை வங்கி
‘7.45% வட்டியில் ஹோம் லோன்; பிராஸசிங் ஃபீஸ் கிடையாது’… ஆச்சரிய சலுகை அறிவித்த பொதுத்துறை வங்கி
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ரெப்போ வட்டி விகித குறைப்பை தொடர்ந்து, பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை 5 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 7.50 சதவீதத்திலிருந்து 7.45 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் கூட்டத்தில் (MPC) ரெப்போ வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டதை தொடர்ந்து, வங்கியின் வீட்டுக் கடன் வட்டி விகிதம் இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை புதிதாக கடன் வாங்குபவர்களுக்கு பொருந்தும். குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம். இந்தக் குறைக்கப்பட்ட வட்டி விகிதங்களின் பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கான வங்கியின் உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது.”இந்த சமீபத்திய வட்டி விகித குறைப்பு, குடிமக்களின் தேவைகளை ஆதரிப்பதையும், கடன் வளர்ச்சியை தூண்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று பேங்க் ஆஃப் பரோடாவின் செயல் இயக்குநர் சஞ்சய் தெரிவித்தார்.மேலும், வீட்டுக் கடன்களுக்கான செயலாக்க கட்டணங்களையும் ரத்து செய்வதாக பேங்க் ஆஃப் பரோடா அறிவித்துள்ளது. இது வீட்டுக் கடன் தேவையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) ஜூலை 1, 2025 முதல் அனைத்து சேமிப்பு கணக்குகளிலும் குறைந்தபட்ச சராசரி இருப்பை பராமரிக்காததற்கான அபராத கட்டணங்களை நீக்குவதாக அறிவித்திருந்தது. கனரா வங்கிக்கு பிறகு, சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச சராசரி இருப்பை பராமரிக்காததற்கான அபராத கட்டணங்களை நீக்கிய இரண்டாவது பொதுத்துறை வங்கி இதுவாகும். இந்தியன் வங்கியும் சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்பு அபராதத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.