வணிகம்
மாறன் சகோதரர்கள் சமரசம்: ஸ்டாலின் முன்னிலையில் தீர்வு?
மாறன் சகோதரர்கள் சமரசம்: ஸ்டாலின் முன்னிலையில் தீர்வு?
சன் டிவி குழுமத்தின் தலைவரான கலாநிதி மாறனுக்கும், அவரது சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறனுக்கும் இடையே நீண்டகாலமாக இருந்து வந்த குடும்ப தகராறுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் சமரசம் எட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மாறன் சகோதரர்களின் உறவினரான மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற ஒரு சந்திப்பில் இந்த முடிவு எட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பில் மாறன்களின் சகோதரி அன்புகரசியும் கலந்து கொண்டதாக மணி கண்ட்ரோல் செய்தி வெளியிட்டுள்ளது.மறைந்த தி.மு.க தலைவர் மு. கருணாநிதியின் பேரன்களான மாறன் சகோதரர்களுக்கு இடையேயான இந்த மோதல், தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மீது மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தி சட்ட அறிவிப்பு அனுப்பியதைத் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்தது. 2003 ஆம் ஆண்டு நிறுவனத்தின் பங்குதாரர் கட்டமைப்பை மீட்டெடுக்க வேண்டும் என அந்த சட்ட அறிவிப்பில் தயாநிதி மாறன் கோரியிருந்தார்.இந்த சமரசத்தின் முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இது பண ரீதியான ஒப்பந்தமா அல்லது வணிகப் பிரிவினை தொடர்பானதா என்பது குறித்த தெளிவான தகவல்கள் இல்லை. இந்த குடும்ப விவகாரம் சன் டிவி நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிக்காது என முன்னர் நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சமரசத்தின் மூலம் மாறன் குடும்பத்திற்குள் ஏற்பட்ட பிளவு முடிவுக்கு வந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.