இலங்கை
வவுனியா மாவட்டத்தின் வெடிவைத்தகல் பகுதியில் 1,000 ஏக்கர் ஆக்கிரமிப்பு; ரவிகரன் எம்.பி. தெரிவிப்பு!
வவுனியா மாவட்டத்தின் வெடிவைத்தகல் பகுதியில் 1,000 ஏக்கர் ஆக்கிரமிப்பு; ரவிகரன் எம்.பி. தெரிவிப்பு!
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெடிவைத்தகல் கிராம அலுவலர் பிரிவில், மகாவலி (எல்) திட்டத்தினூடாக சுமார் 1,000 ஏக்கர் வரையான தமிழ் மக்களின் காணிகள் பெரும்பான்மை மக்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றன என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
வவுனியா வடக்கு பிரதேசசெயலர் பிரிவுக்குட்பட்ட வெடிவைத்தகல் கிராம அலுவலர் பிரிவில், திரிவைச்சகுளம் பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பெரும்பான்மை இனத்தவர்களால் தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக்காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. அத்துடன், மகாவலி (எல்) வலயத்தின் கீழ் மிகப்பெரியளவு வனப்பகுதிகளும் பெரும்பான்மை இனத்தவர்களால் அழிக்கப்பட்டு ஆக்கிரமிப்புச்செயற்பாடுகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன.
இந்தச் செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது. இந்த விடயம் தொடர்பில் உரிய திணைக்களங்களுடன் கலந்துரையாடுவதுடன், நாடாளுமன்றத்திலும் இது தொடர்பில் கேள்வி எழுப்பப்படும் என்றார்.
இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற பகுதிகளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.