பொழுதுபோக்கு
இனிமே இப்படி பண்ண செருப்பாலே அடிப்பேன்; ரஜினிகாந்தை திட்டிய கே.பாலச்சந்தர்: என்ன தவறு செய்தார்?
இனிமே இப்படி பண்ண செருப்பாலே அடிப்பேன்; ரஜினிகாந்தை திட்டிய கே.பாலச்சந்தர்: என்ன தவறு செய்தார்?
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் ரஜினிகாந்திற்கு எண்ணிலடங்காத அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கு தெரிந்த விஷயம் தான். அப்படி ஒரு அந்தஸ்தில் இருக்கும் நடிகர், தனது வாழ்வில் நடந்த சம்பவங்களை வெளிப்படையாக பொது இடங்களில் கூறுவதால் தான் இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.ஏனெனில், நம்மை பற்றிய நேர்மறையான பக்கங்களை மட்டுமே பொதுவெளியில் கூறுவோம். ஆனால், இதில் இருந்து மாறுபட்ட ரஜினிகாந்த் தனது இமேஜ் குறித்து கவலைப்படாமல், பல விஷயங்களை தெரிவித்துள்ளார். அந்த வகையில், ஒரு முறை படப்பிடிப்பு தளத்தில் கே. பாலச்சந்தர் தன் மீது கோபமடைந்தது குறித்து நடிகர் ரஜினிகாந்த் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்டார். அதன்படி, “ஒரு நாள் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், என் அறைக்கு சென்று குளித்து விட்டு மது அருந்த தொடங்கினேன். அப்போது, உதவி இயக்குநர் ஒருவர் என் அறைக்கு வந்தார். ஒரு ஷாட் எடுக்கவில்லை என்பதை அறியாமல் பேக்கப் சொல்லி விட்டதாகவும், அதனை எடுப்பதற்கு கே. பாலச்சந்தர் என்னை உடனடியாக அழைத்து வரச் சொன்னார் என்றும் கூறினார்.இதனை கேட்டதும் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஏனெனில், அப்போது தான் மது அருந்தினேன். மது அருந்திய நிலையில் எவ்வாறு படப்பிடிப்பிற்கு செல்வது என்று சிந்தித்தேன். இதனால், மீண்டும் குளித்து விட்டு மேக்கப்புடன் படப்பிடிப்பிற்கு சென்றேன்.எனினும், பாலச்சந்தர் அருகில் செல்வதை தவிர்த்தேன். அப்படி இருந்தும் நான் மது அருந்தியதை அவர் கண்டுபிடித்து விட்டார். என்னை அவரது அறைக்கு வருமாறு அழைத்தார். நானும் உடனடியாக அவரது அறைக்குச் சென்றேன்.அங்கு என்னிடம், ‘நாகேஷை தெரியுமா உனக்கு? நாகேஷ் போன்ற ஒரு கலைஞன் முன்பு எறும்புக்கு கூட நீ சமம் இல்லை. ஆனால், மதுப்பழக்கத்தால் தன்னுடைய வாழ்க்கையை நாகேஷ் பாழாக்கி விட்டார். இனி, படப்பிடிப்பில் உன்னை மது அருந்தியவாறு நான் பார்த்தால், செருப்பால் அடிப்பேன்’ என கே. பாலச்சந்தர் கூறினார். அதன் பின்னர், எவ்வளவு குளிரான இடங்களுக்கு சென்றாலும் கூட மேக்கப்பில் இருக்கும் போது நான் மது அருந்துவது கிடையாது” என ரஜினிகாந்த் தெரிவித்தார்.