இலங்கை
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் ; சாணக்கியன் வலியுறுத்து
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் ; சாணக்கியன் வலியுறுத்து
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக நீதியை பெற்றுக்கொடுக்க சர்வதேசத்துடன் தொடர்புடைய ஒரு வழக்கு தொடுனரை நாம் நியமிக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய அவர்,
சாரா ஜாஸ்மினின் மரபணுப் பரிசோதனைகள் எத்தனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன? சமர்ப்பிக்கப்பட்ட திகதிகள் யாவை என்பதை குறிப்பிடுவீர்களா? மீண்டுமொருமுறை இந்த மரபணுப் பரிசோதனையை நடத்த இந்த நாட்டிலுள்ள நிறுவனங்களிடம் வசதியுள்ளதா?
இந்த தாக்குதல் குறித்த விசாரணைகளின் போது வெளிவந்த துப்பாக்கி ஒன்று காணாமல் போனமை மற்றும் அந்த துப்பாக்கியின் மீட்பு மற்றும் காணாமல் போன அதே துப்பாக்கிதானா மீட்கப்பட்டது என்பது தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கை ஒன்று உள்ளதா? இதனை உறுதி செய்தது யார் என்பதை சபைக்கு தெரிவிப்பீர்களா? என கேள்வியெழுப்பியிருந்தார்.
மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க சர்வதேச உதவியுடன் விசேட வழக்குத்தொடுநர் அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்படவேண்டும்.
மேலும் இதனை விசாரிப்பதற்கு தமக்கு கடினமாக உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அந்தப் பின்னணியில் இதனை நான் பிரேரிக்கின்றேன்.
இந்த தாக்குதலின் வரலாற்றை எடுத்துக்கொண்டால் 2004 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து இராணுவப்புலனாய்வுப்பிரிவிலிருந்து கிழக்குமாகாணத்தில் சில குழுக்கள் உருவாக்கப்பட்டிருந்தன.
அதன் தலைவர்களாக சமால் பைசால் கலீல் ஆகிய மூன்று நபர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு அடையாள அட்டைகளும் இருந்தன.
அதிலுள்ள புகைப்படங்களை நான் சபைக்கு சமர்ப்பிக்கின்றேன்.
2008 இலிருந்து 2019 காலப்பகுதி வரை 17,900 வரையான ஊதியம் இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. ரோமன் ரசாத் என்ற இவர் ஏறாவூர் பொலிஸ்நிலையத்தின் பொறுப்பதிகாரியின் சமையல்காரர் என்ற ரீதியில் பணிபுரிந்துள்ளார்.
அவரது துப்பாக்கியே காணாமல் ஆக்கப்பட்டது.
அதன் பின்னர் ஒரு பிரச்சினை எழுந்தது. சட்விக் என்ற நபர் 2004 காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இஸ்லாமிக் சென்டர் என்ற குழுவின் செயலாளருக்கு அந்த துப்பாக்கியை விற்றதாக தெரியவந்திருக்கிறது.
அதன் பின்னர் இந்த துப்பாக்கி தொடர்பாக எந்த விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
அதன் பின்னர் சாய்ந்தமருதுவில் இடம்பெற்ற தாக்குதலில் காணாமல் ஆக்கப்பட்ட அந்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் விசாரிக்க சர்வதேசத்துடன் சம்பந்தப்பட்ட வழக்குத்தொடுநர் ஒருவரை நாம் நியமிக்கவேண்டும் எனத்தெரிவித்தார்.