இலங்கை
காணாமலாக்கப்பட்ட லலித், குகன் விசாரணைகள் மீள ஆரம்பம்; அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவிப்பு!
காணாமலாக்கப்பட்ட லலித், குகன் விசாரணைகள் மீள ஆரம்பம்; அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவிப்பு!
அரசியல் செயற்பாட்டாளர்களான லலித், குகன் ஆகியோர் காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் மீளவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கவே முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பிலும் விளக்கம் கோரப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.
நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போது. தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக. 2011ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் காணாமலாக்கப்பட்ட லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகாநந்தன் ஆகிய இருவர் தொடர்பிலான விசாரணைகள் எந்த மட்டத்தில் உள்ளன? என்று வினவினார்.
இதற்கு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்ததாவது:-
2011ஆம் ஆண்டு டிசெம்பர் 9ஆம் திகதி லலித் குமார் வீரராஜ், குகன் முருகானந்தம் ஆகியோர் காணாமலாக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்துக்கு 2011ஆம் ஆண்டு டிசெம்பர் 12ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குத் தொடர்பில் 17 சந்தர்ப்பங்களில் அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலதிக தகவல்களை வழங்கியுள்ளார். இறுதியாக 2014ஆம் ஆண்டு ஒக்ரோபர் 10ஆம் திகதி நீதிமன்றம் கூடியவேளை வழக்கு கிடப்பில் போடப்பட்டது.
இதுதொடர்பான விசாரணைகளில் முன்னேற்றம் இல்லாமையால், விசாரணைகளை முன்னெடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபரால் 2025ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்குத் தேவையான உத்தரவுகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அதே திகதியில் வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பட்டது. அச்சுவேலி பொலிஸ் நிலையத்தாலும், யாழ்ப்பாணக் குற்றத்தடுப்பு பிரிவினராலும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், தற்போது மேலதிக விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன -என்றார்.