இலங்கை
பல்கலைக்கழக பகிடிவதை தொடர்பில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பல்கலைக்கழக பகிடிவதை தொடர்பில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பல்கலைக்கழகங்களில் பகிடிவதையைத் தடுப்பது தொடர்பில் உயர் நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி, பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களைத் துன்புறுத்துவதைத் தடுப்பதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை, கட்டாயமாக அமுல்படுத்துமாறு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு, உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
குறித்த வழிகாட்டுதல்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி, தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் மற்றும் வசதிகளை வழங்குமாறு கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பசிந்து ஹிருஷான் டி சில்வா என்ற பல்கலைக்கழக மாணவன், தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு மீதான தீர்ப்பை அறிவிக்கும்போது, மூவரடங்கிய நீதியரசர்கள் ஆயம் இந்த உத்தரவுகளைப் பிறப்பித்தது.
அதற்கமைய, இந்த உத்தரவுகளைச் செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பான அறிக்கையை, அடுத்த வருடம் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் முதலாம் வருட மாணவராக இணைந்த போது, 2020 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பகிடிவதை காரணமாக, பசிந்து ஹிருஷான் டி சில்வா என்ற மாணவன் எதிர்நோக்கிய உடல், உள தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த அடிப்படை உரிமை மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.