இலங்கை

பொலிஸாருக்குச் சொந்தமான டிப்பர்களிலும் மணல் கடத்தல்; ஆளுநரிடம் முறைப்பாடு!

Published

on

பொலிஸாருக்குச் சொந்தமான டிப்பர்களிலும் மணல் கடத்தல்; ஆளுநரிடம் முறைப்பாடு!

வடக்கு மாகாணத்தில், பொலிஸாருக்குச் சொந்தமான டிப்பர்களிலும் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுகின்றது என்று வடக்கு மாகாண ஆளுநரிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

வடக்கு மாகாணத்தில் மணல் விநியோகத்தைச் சீராக்குவது. சுண்ணக்கல் அகழ்வு மற்றும் விநியோகத்தை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Advertisement

அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத்திட்டங்கள் மற்றும் அரசாங்க திணைக்களங்களால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களுக்கே மணலை அதிக விலையில் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை இருப்பது தொடர்பில் குறிப்பிட்ட ஆளுநர். இது தொடர்பில் மீண்டும் மீண்டும் ஆராய்ந்து கொண்டிருக்காமல் முடிவு எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு அமைவாக, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் சில ஆற்றுப்படுக்கைகள் குளங்களிலிருந்து மணலை கழுவி எடுத்துப் பயன்படுத்த முடியும் என்பதுடன் அதற்கான இடங்களை விரைவாக அடையாளப்படுத்துமாறும், உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்பில் ‘யாட்’ அமைத்து அங்கிருந்து நியாய விலையில் விநியோகம் நடைபெறுவதை உறுதிப்படுத்தும் பொறி முறையை உடனடியாக ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் கல்மடுக்குளத்தில் ஏற்கனவே கழுவி எடுக்கப்பட்ட மணல் கரைச்சிப் பிரதேசசபை ஊடாக விநியோகிக்கப்படவுள்ளமை தொடர்பிலும் கலந்துரையாடலில் தெரியப்படுத்தப்பட்டது.

இதேவேளை, சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் ஒப்பந்தகாரர்கள் மற்றும் மாவட்டச் செயலர்கள் சுட்டிக்காட்டினர். ஒரு சில பொலிஸாருக்குச் சொந்தமான டிப்பர் வாகனங்களும் இத்தகைய நடவ டிக்கைகளில் ஈடுபடுகின்றன என்றும் அதன் காரணமாகவே இதனைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை இருப்பதாகவும் தெரியப்படுத்தப்பட்டது. மக்களுக்கு நியாயமான விலையில் மணல் தாரளமாக கிடைப்பதை உறுதி செய்வதன் ஊடாக இதனைக் குறைக்க முடியும் என ஆளுநர் குறிப்பிட்டார். அதற்கு உடனடியாக பிரதேச சபைகள் ஊடாக ‘யாட்’ அமைத்து விநியோகத்தை ஆரம்பிப்பதற்கு ஏதுவாக மாவட்டச் செயலர்கள் தமது மாவட்ட மட்டத்தில் கலந்துரையாடல்களை நடத்துமாறும் ஆளுநர் பணித்தார்.

Advertisement

மணல் அகழ்வுக்குரிய இடத்திலிருந்து குறிப்பிட்டளவு தூரத்தில் ‘யாட்’ அமைக்கப்படுவதுடன் அதற்காகப் பயன்படுத்தப்படும் டிப்பர்களுக்கு ‘ஜி.பி.எஸ்.’ கருவிகள் பொருத்தி கண்காணிக்க வேண்டும். மேலும் மணல் அகழ்வுக்கு எத்தனை நாள்கள் என்பது ஒதுக்கப்பட வேண்டும். இதன்மூலம் மணல் அகழ்வு நடவடிக்கையை முழுமையாகக் கண்காணித்து கட்டுப்படுத்த முடியும் என யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் ம.கபிலன் குறிப்பிட்டார். ஆளுநர். மாவட்டச் செயலர்கள், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் இந்த யோசனையை ஏற்றுக்கொண்ட னர். கொள்கை ரீதியாக நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும் அமைச்சருமான இ.சந்திரசேகரன் ஊடாக அமைச்சரவைக்கு இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவைத் தீர்மானமாக இதனை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் ம.கபிலன் சுட்டிக்காட்டினார்.

இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் ம.கபிலன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண பிரதிப்பிரதம செயலாளர், வடக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களப் பணிப்பாளர், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட செயலாளர்கள், கிளிநொச்சி மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் பிராந்திய பொறியியலாளர், வடக்கு மாகாண கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர், ஒப்பந்தகாரர்கள் சங்க நிர்வாகத்தினர் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version